ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேச்சு அதிமுகவை முந்திக்கொண்ட அவசரம் வெளிப்படுகிறது: திருமாவளவன் அறிக்கை

3 months ago 14

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி செய்கிறார்.

அவர் பாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா அல்லது எதிர்ப்பவர்களும் பாசிஸ்டுகள் தான் என்கிறாரா அவர் யாரை நையாண்டி செய்கிறார், திமுகவையா, காங்கிரசையா, இடது சாரி கட்சிகளையா அல்லது அம்பேத்கர், பெரியார் இயக்கங்களையா, பாஜ – சங்பரிவார்களின் பாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே பாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?. அவரது உரையில் வெளிப்படும் அதிகார வேட்கையும் அடையாள அரசியலும் பழைய சரக்குகளே குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே.

ஆக்கப்பூர்வமான புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ என தோன்றுகிறது.

ஆபர் என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டு மொத்தத்தில் பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேச்சு அதிமுகவை முந்திக்கொண்ட அவசரம் வெளிப்படுகிறது: திருமாவளவன் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article