
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் முதலில் நட்பாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரே வகுப்பு என்பதால், ஒன்றாக இருப்பதையும், ஓயாமல் பேசிப்பழகுவதையும் யாரும் தவறாக நினைக்கவில்லை. இதனால் பள்ளியிலேயே இருவரும் சந்தித்து பேசி காதலை வளர்த்து வந்தனர்.
மேலும் வீடியோ கால் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். மாணவனின் ஆசைவார்த்தைகளை நம்பிய மாணவி சில நேரங்களில் ஆடையின்றியும், அரைகுறை ஆடைகளுடனும் ஆபாசமாக தோன்றி அவருடன் பேசி உள்ளார். அந்த ஆபாச வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்களை அந்த மாணவர் செல்போனில் பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளம் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். மேலும் சிலருக்கு ஆபாச வீடியோ பகிரப்பட்டு உள்ளது.
ஒரு கட்டத்தில் இதுபற்றி அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குன்னூர் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.