உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலும், அதன் முடிவுகளும் இவ்வாரத்தில் வெளியாக உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிலையில், இப்ேபாது பதவியில் இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் நாளை செவ்வாய்கிழமை நடக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பும் மல்லுக்கட்டுகின்றனர்.
பெரும் தொழில் அதிபரான டிரம்ப் ஏற்கனவே அமெரிக்காவில் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர். பண முதலையான அவருக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். டிரம்பை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிசும் சற்றும் சளைத்தவரல்ல. இப்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பதோடு, மாவட்ட, மாகாண அட்டார்னி ஜெனரலாகவும் இருந்துள்ளார். இவரது தாயார் சியாமளா கோபாலன் தமிழத்தை சேர்ந்தவர் என்பது இந்தியர்களையும் உற்சாகப்படுத்துகிறது.
முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர பல ஹாலிவுட் பிரபலங்களும் கமலா ஹாரிசை ஆதரிக்கின்றனர். அமெரிக்கர்கள் மட்டுமின்றி, இந்திய வம்சாவளிகள், கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கமலா ஹாரிஸ் களத்தில் உள்ளார். கருத்துகணிப்புகளை பொறுத்தவரை ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் முன்னணியில் இருந்தாலும், நாட்கள் நெருங்க, நெருங்க டிரம்புக்கும் ஆதரவு கூடுவதால் போட்டியின் வீரியம் கூடியுள்ளது.
இந்தியாவை விட 3 மடங்கு பெரியதான அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடத்தப்படும் விதமும் வித்தியாசமானதுதான். சுமார் 16 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இத்தேர்தலில், பொதுமக்கள் நேரடியாக அதிபருக்கு வாக்களிக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளுக்கு மொத்தம் 538 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அதில் 270க்கும் மேலான உறுப்பினர்களை பெறும் கட்சியே அதிபர் அந்தஸ்தை பெறும்.
இவை ஒருபுறமிருக்க அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் ஒருவித ஆடுபுலி ஆட்டம் போன்றதே. இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல ஆளும்கட்சிகளை அதிரடியாக தூக்கி எறிகிற பழக்கமெல்லாம் அங்குள்ள மக்களுக்கு கிடையாது. அந்தவகையில் கடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமா இருமுறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி சார்பில் 2000 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இருமுறை தொடர்ச்சியாக ஜார்ஜ் புஷ்ஷூம் வென்றுள்ளார். எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும்கட்சிகள் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளன.
நேரடியாக மற்றும் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அமலில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 7 கோடி வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர். மீதமுள்ளவர்களும் நாளை வாக்களிக்க உள்ள நிலையில், கடும் போட்டி காரணமாக இம்முறை இழுபறி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா, வடகரோலினா உள்ளிட்ட 7 மாநிலங்களில் கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்ந்து இழுபறி நிலையை சுட்டிக்காட்டுகின்றன. அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரி மாதத்தில் என்றாலும், இந்த வாரத்திலேயே வெள்ளை மாளிகையின் அரியணையில் அமரப்போவது யார் என்பது முடிவாகி விடும்.
The post ஆடு புலி ஆட்டம் appeared first on Dinakaran.