13.1.2025 ஆருத்ரா தரிசனம்
பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான்கில் ஒன்று திருக்கானப்பேர் என்ற காளையார் கோயில். மற்றைய திருத்தலங்கள் திரு ஆலவாய், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருப்புத்தூர், திருப்புனவாயில், திருராமேஸ்வரம், திருப்புவனம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருஆப்பனூர், திருவாடானை, திருக்கொடுங்குன்றம் என்பவையாகும்.
பாண்டிய நாட்டின் பெருமையைப் பாட வந்த மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானுடைய நாடு பாண்டிய நாடே என்று வலியுறுத்திச் சொல்கிறார். தமது திருவாசகத்தில் ‘கீர்த்தித் திருவகல்’ பகுதியில், ‘மீண்டுவாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம் பதியாகவும்’ என்றும் கூறுபவர் இதே கருத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் தமது திருத்தசாங்கத்தில்,’
‘‘ஏதமிலா இன் சொல் மரகதமே ஏழ்மொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய்-காதலவர்க்(கு)
அன்பாண்டு மீள அருள்புரிவான் நாடென்றுந்
தென்பாண்டி நாடே தெளி’’
– என்றும் பாடியுள்ளார்.
இறைவனுக்குரிய நாடு சொன்ன மாணிக்கவாசகப் பெருந்தகை தமது கீர்த்தித் திருவகலில் அவருக்குரிய ஊரும் சொல்கிறார். ‘பக்தி செய்யடியரை பரம்பரத் துயப்பவன் உத்தர கோசமங்கை யூராகவும்’, மேலும் அவர் தமது திருத்தசாங்கத்தில்,
‘‘தாதாடு பூஞ்சோலை தந்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கையூர்!’’
என்று பாடி நாடும், ஊரும், நாமமும், உருவமும் இல்லாத ஒருவனுக்கு அவற்றைக் கற்பித்துப் போற்றுகிறார்.திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பெருமான் சிவபெருமானுக்குரிய நாடும் ஊரும் சொன்னார் என்றால், சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் அவனுடைய இருப்பிடமும் வாழும் ஊரும் ‘காளையார் கோயில்’ எனப்படும் கானப்பேர் காளை’ என்ற திருத்தலமே என்கிறார். இந்தக் கூற்றை நமக்கு விளக்கி அருளியவர் பெரிய புராணம் பாடியருளிய சேக்கிழார் பெருமானே ஆவார்.
ஒரு சமயம் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் யாத்திரை முடிந்து திருச்சுழியல் எனும் திருத்தலத்தில் தங்கியிருந்த போது இரவிலே ஒரு கனவு. அந்தக் கனவில் சிவபெருமான் காளை வடிவுகொண்டு முடியும் சுழியும் தரித்து காட்சி தந்து, ‘‘யாமிருப்பது கானக்போ’’ என்று உணர்த்தியதாக சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில் இறைவன் இருக்குமிடம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
‘‘கானப்பேர் யாம் இருப்ப’’ தெனக்கழறிக் கங்கையெனும்
வானப் பேராறுலவும் மாமுடியார் தாமகல
ஞானப் பேராளருணர்ந் தசியத்து- நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார் அருளிந்த பரி’’ சென்பார்.
இதன் மூலம் இறைவன் இருக்கும் தலம் ‘கானப் பேர் காளை எனும்’ ‘காளையார் கோயில்’ என்பதை உணரலாம். சிவபெருமான், சுந்தர மூர்த்தி நாயனாருக்கு எங்குமே இல்லாத் திருவேடம் காட்டி அருளியதும். ‘‘தொண்டரடி தொழலும்’’ எனத் தொடங்கும் பதிகம் பாடிக்’’ கண்குளிரக் கண்டு தொழப்பெறுவது என்று கொலோ!’’ என ஏங்க வைத்த திருத்தலம் மன்னு திருக்கானப் பேர் ஆகும்.
இத்திருத்தலம் வந்து வழிபட்ட திருஞான சம்பந்தர் பெருமானும் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் ‘‘விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணலின் அடியலால் அடைசரண் உடையரோ அடியரே!’’ என்று போற்றுகிறார். தடம் என்று ஞான சம்பந்தர் குறிப்பிட்டிருப்பது, காளையார் கோயிலில் உள்ள ஒரு தீர்த்தம் ஆகும். இத்திருக்குளத்தில் வழிபாடு செய்வோர் தீராதபிணியெல்லாம் தீரப் பெறுவர், என்பதை, ‘‘ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட என்னில் ஞானமாமலர்கொடு நணுகுதல் நன்மையே!’’ என்பதும் இவர் தம் கூற்றாகும்.
திருக்கானப் பேர் திருத்தலத்தைத் தலையினால் வணங்குவோர் நாளும், நாளும் உயர்வதோர் நன்மையே பெறுவர், தவமுடையோர் ஆவர் என்று ஞான
சம்பந்தர் பெருமான் பாடியுள்ளார்.
இத்தகைய சிறப்புடைய திருத்தலம் காளையார் கோயில்!
திருக்கானப்பேர் எனும் காளையார் கோயில் செல்லும் பேருந்துகள் மிக அதிகம். தற்பொழுது பேருந்து நிலையம் உள்ள இடத்திலேயே திருக்கோயிலும் உள்ளது. மிகப் பெரிய கோயில் மூன்று சிவ சந்நதிகள் ஒரே திசை பார்த்து வெவ்வேறு சந்நதிகளில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர் அவர்கள், அருள்மிகு சௌந்திர நாயகி சமேத சோமேசர், அருள்மிகு சொர்ணவல்லி சமேத காளீசர், அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரீசர்.
இம்மூன்று இறைவர்களையும் பற்றி ஒரு வழக்குப் பழமொழி உண்டு. அது காளை தேட, சொக்கர் சுகிக்க, சோமர் அழிக்க என்பதாம். அதாவது நாம் தேட காளை, நமது பாவத்தை அழிக்க சோமர், இறை வனின் சுகானுபவத்தில் திளைக்க சொக்கர் என்பது பொருளாம்.காளையார் கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில் ‘‘ஆருத்ரா உற்சவம்’’ சிறப்புடைய குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுடைய திருச்சபைகள் என்று போற்றப்படுகின்ற பொற்சபை – சிதம்பரம்; வெள்ளிசபை – மதுரை, ரத்தினசபை – திருஆலங்காடு, சித்திரச்சபை – குற்றாலம் ஆகிய திருத் தலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் இவற்றுள் அடங்காத திருஉத்திர கோசமங்கையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் மெய்யன்பர்கள் நாடிச்சென்று வழிபடும் தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. காரணம் ஆருத்ரா தரிசனம் அன்று தான் சந்தனச் சாந்தின் சுந்தர மேனியனாகத் திகழும் ஆடல் வல்லான் தனது மரகதமேனி காட்டி அருள்பாலித்து அருளுகின்றான். சிதம்பரத்தில் அம்பலத்தில் அரங்கேறுவதற்கு முன்பு அறையில் ஆடிப் பயின்ற இடமே உத்திர கோசமங்கை என்று மரபு வழி சொல்லப்படுகிறது.
சைவர்களுக்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகக் கருதப்படுவது திருவாதிரை விரதம். இதனைத் தான் ஆருத்ரா தரிசனம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த விரதம் சூரியன் தனுர் ராசியில் இருக்கும் மார்கழி மாத ஆதிரை நாளில் மேற்கொள்ளப்படும் விரதமாகும். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி நடராஜப் பெருமானை மன ஒருமைப் பாட்டுடன் வணங்குவோர் எண்ணிய எண்ணியாங்கு பெறுவர்.
அன்று ஆலயம் சென்று அவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து உபவாசம் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடி முக்கண்ணனை வணங்கி உணவு உண்டு விரதம் முடித்திருக்க வேண்டும். திருவாதிரை அன்று நடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடுகிறார் என்பது ஐதீகம்! ஆனந்தம் நிலைக்கும். சிதம்பரம் திருத்தலத்திலும் மற்றைய சிவத் திருத்தலங்களிலும் ஆடலரசன், ஆடல்நீடு பாதன் எனப் போற்றப்படும் நடராஜப் பெருமானின் திருமூர்த்தம் ஒன்றினுக்கே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும் இதைப் பலரும் அறிவர்!
ஆனால், கானப்பேர் எனும் காளையார் கோயில் திருத்தலத்தில் மூன்று நடராஜப் பெருமானின் திருமூர்த்தங்களுக்கு ஒரே நேரத்தில் அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெறுவது மெய் சிலிர்க்கச் செய்யும், ஊனையும் உயிரையும் உருக்கும் கண் கொள்ளாக் காட்சியாகும். இந்த திருக்கானப்பேர் திருத்தலம் தவிர மற்ற எந்தத் திருத்தலத்திலும் இத்தகைய அற்புதமான, அபூர்வமான நிகழ்ச்சி நடைபெறுவது இல்லை. சங்க காலம் முதல் இன்று வரை ஆன்மிகப் பெருமிதத்தால், எங்கும் நடைபெறாத வண்ணம் திருவாதிரைத் திருவிழா இங்கு மட்டும் நடைபெறும் அற்புதத்தை பறைசாற்றும் விதமாக தலை நிமிர்ந்து நிற்கிறது காளையார் கோயில்!
சுந்தரமூர்த்தி நாயன்மாரும், சேரன் பெருமாளும் ஒன்றாக இங்கு வந்தபோது ‘காளையாக வந்து தமது இருப்பிடத்தைக் காட்டிய செம் பொன் செல்வர்’ இன்றும் மருது பாண்டியர் கட்டிய கம்பீரமான கோபுரமாக நின்று காட்சித் தருகிறார். இதையே பரணதேவர்,
‘‘நிலைத்து இவ்வுலகனைத்து நீரேயாய் நின்றீர்
நிலைத்து இவ்வுலகனைத்து நீரே- நிலைத்தீரக்
கானப்பேரீர் கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பேரீர் கங்கையீர்!’’
– என்று போற்றியருளியுள்ளார்.
இத்திருத்தலத்தில் நடைபெறும் அதி அற்புதமான திருவாதிரைத் திருவிழாவைக் கண்ணுற்ற ஞானிகள் பெரிதும் போற்றிப் பலவாறு சிறப்பித்துள்ளனர். மனிதன் மன ஒருமைப்பாட்டினைப் பெற மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள் ஐந்தும் கண்களில் ஒன்ற வேண்டும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் கரணங்கள் நான்கும் சிந்தையில் ஒன்ற வேண்டும். மூன்று குணங்களான ரஜோ, ச்வ, தாமச குணங்கள் ஆகிய மூன்றும் சத்வ குணமாகிய சாத்வீகத்தில் ஒன்ற வேண்டும். அப்பொழுதுதான் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒன்றிய ஆன்மிக மேம்பாட்டினை அடையமுடியும். அதற்காகவே ஆடலரசன் அகிலாண்டேஸ்வரன் ஆனந்த தாண்டவமாடி அருள்பாலிக்கிறான்.
இங்கே கானப்பேர் என்னும் காளையார் கோயிலில் மூன்று மூர்த்திகள் ஏகமாக ஒரே நேரத்தில் ஆனந்த நர்த்தன மாடி நம் ஆன்மாவை ஆட்கொள்கிறார்கள். கானப்பேர் எனும் காளையார் கோயில் திருத்தலத்தில் திருநடனமிடும் மும்மூர்த்திகளும் நம்மை ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திடச் செய்கிறார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் தனது தேவாரத்தில் ஏழாம் திருமுறையில் திருக்கானப்பேர் குறித்து சிறப்பித்துப் போற்றுகிறார்.
‘‘நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பதமென்றுணர்வார் சொற்பத மார் சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றதனில் தெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருதமும் அனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்று கொலோ
கார்வயல் சூழ் கானப் பேருறை காளையையே!’’
ஆகவே திருவாதிரைத் திருநாளில் கானப்பேர் உறையும், காளையார் கோயில் மும்மூர்த்திகளின் திருநடனத்தைக் கண் குளிரக் கண்டு தரிசிப்போம். கவலைகள் நீங்கக் கை தொழுவோம்!
டி.எம்.ரத்தினவேல்
The post ஆடலரசர் மூவருக்கு அதிசயமாக நடைபெறும் ஆருத்ரா தரிசனம்! appeared first on Dinakaran.