
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நடிகை விஜயலட்சுமியின் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஓசூரில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது;
"இதே வழக்கு தொடர்பாக என்னிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினார்கள். அதே வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். என் மீது தீவிரம் காட்டும் போலீசார் அண்ணா பல்கலை, பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் இதுபோன்று தீவிரம் காட்டவில்லையே.. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசுதான் அசிங்கப்படுகிறது.
நான் ஆஜராவேன் என உறுதி அளித்த பின்னர் காவல்துறைக்கு என்ன அவசரம். ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும்? ஆஜராவேன் என கூறிய பின்னரும் என்னை ஏன் விரட்டுகிறீர்கள்? வளசரவாக்கம் போலீஸ் நிலையம் எங்கே சென்றுவிடும்? காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன். என்னை எப்படி சமாளிக்க வேண்டுமென்று தெரியாமல் பெண்ணை வைத்து அடக்க முயற்சி செய்கின்றனர்.
நாளை காலை 11 மணிக்கெல்லாம் என்னால் ஆஜராக முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும்? நாளை தருமபுரி செல்கிறேன். நானே என்றாவது ஒருநாள் ஆஜராவேன். சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்."
இவ்வாறு சீமான் கூறினார்.