15 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்த பெண் ஒருவர், குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வேலைபார்த்த தனது கணவரை வீட்டிற்கு வரவழைத்து சகோதரருடன் சேர்ந்து அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசியை சேர்ந்தவர் சின்னத்துரை. 15 வருடங்களுக்கு முன்பு மர அறுவை ஆலையில் வேலைபார்க்கும் போது புதூர் பகுதியை சேர்ந்த மாயா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், சின்னதுரை சில வருடங்களாக ராமேஸ்வரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். குழந்தைகள் பிறந்த பின்னர் மாயாவை தாய் வீட்டில் சேர்த்துக் கொண்டதால், மாயா தனது தாய் வீட்டுக்கு அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
வருடத்துக்கு 3 முறை மட்டுமே ஊருக்கு வந்து சென்ற சின்னத்துரை தான் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவில் தனக்கு கடன் தருவதாக கூறி அதற்கு கையெழுத்து போடுவதற்காக சின்னத்துரையை மாயா வர வழைத்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மூர்ச்சையற்று கிடந்த கணவரின் உடலுடன் ஆட்டோவில் சின்னத்துரையின் சகோதரி கலா வீட்டுக்கு சென்றார் மாயா.
தனது கணவனை யாரோ மர்ம நபர்கள் தாக்கி வீட்டு வாசலில் போட்டுச்சென்று விட்டதாக கூறி அழுதுள்ளார். சின்னத்துரையின் உடலை தொட்டுப்பார்த்த போது அவரது பின் மண்டையில் வெட்டுகாயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதை கண்ட சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அண்ணனை சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் எனது வீட்டிற்கு ஏன் கொண்டு வந்தீர்கள் ? என கேள்வி எழுப்பி உள்ளார்.
5 மணி நேரமாக ஆட்டோவில் சுற்றிய பின்னர், தனது கணவர் சின்னத்துரையின் சடலத்தை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார் மாயா. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரின் விசாரணையில் சின்னத்துரை கொலை பின்னணி அம்பலமானது. மாயாவின் சகோதரர் மனுவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தனது சகோதரி கலப்பு திருமணம் செய்தது பிடிக்கவில்லை. தற்போது சின்னத்துரை வெளியூரில் வசித்து வரும் நிலையில் , தனியாக வசிக்கும் தங்கை, தடம் மாறி செல்லாமல் இருக்க, வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தன்று இரவு கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது மாயாவும் , மனுவும் சேர்ந்து கம்பியால் அடித்து சின்னதுரையை கொலை செய்ததாகவும், அதனை மறைக்க வேறு யாரோ தாக்கிச் சென்று விட்டனர் என்று கூறி ஆட்டோவில் தூக்கிச்சென்று நாடகமாடியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கணவனை கொலை செய்த மாயா, மனு ஆகியோரை கைது செய்த போலீசார், சடலத்தை ஆட்டோவில் ஏற்றி ஊர் ஊராக சுற்ற உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் கணவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக மாயா முதலில் போலீசாரை குழப்பியதால், மாயாவின் செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.