சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் பங்கஜ் அரோரா கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்புவிழா சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் முன்னிலை வகித்தார். பிஎட், எம்எட் படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ - மாணவியருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.