ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: தமிழ் நாட்டின் மனிஷா தங்கம் வென்று சாதனை; பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்

1 week ago 3

மியுயாங்: தாய்லாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மனிஷா ராமதாஸ், சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தாய்லாந்தின் மியுயாங் நகரில் ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழகத்தின் திருவள்ளூரை சேர்ந்த இந்திய வீராங்கனை மனிஷா ராமதாஸ் (20), இரு முறை பாராலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சீன வீராங்கனை யாங் கியுக்ஸியா உடன் மோதினார். இப்போட்டியில் துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய மனிஷா, முதல் செட்டை, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆடிய சீன வீராங்கனை 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அதை வசப்படுத்தினார்.

அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டியின் துவக்கத்தில் மளமளவென புள்ளிகளை எடுத்த மனிஷா ஒரு கட்டத்தில் பல தவறுகளை செய்ததால், தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் கடைசி நேரத்தில் சாமர்த்தியமாக ஆடி, அடுத்த 7 புள்ளிகளில் 6ஐ கைப்பற்றினார். அதனால், அந்த செட்டை, 21-15 என்ற கணக்கில் அவர் வசப்படுத்தி வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றி மூலம், அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன், இந்திய வீரர் குமார் நிதேஷ் இணை அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

The post ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: தமிழ் நாட்டின் மனிஷா தங்கம் வென்று சாதனை; பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார் appeared first on Dinakaran.

Read Entire Article