ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைககளுக்கு ஊக்கத்தொகை

2 hours ago 1

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.11.2024) டி.என். சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியின் கீழ், 13 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வெளிநாடுகளில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக போட்டிகளுக்கான நுழைவுக்கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்காக மொத்தம் ரூ.5,99,184 க்கான காசோலைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்கேற்கும் செலவுகளை மேற்கொள்ள இயலாமையால், போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்ற சூழலை மாற்றிட, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலமாக வெளிநாடுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு அந்த போட்டிகளில் பங்கேற்றிட, போட்டிகளுக்கான நுழைவுக்கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்கான நிதியினை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை சொந்த செலவிலும், தனியார் நிறுவனங்கள், மற்றும் அமைப்புகளின் நிதியுதவியிலும் மட்டுமே போட்டிகளில் பங்கேற்று வந்த தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தற்போது பல்வேறு வெளிநாட்டு போட்டிகளில் எளிதாக கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பின் காரணமாக, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பதக்கங்கள் வென்று திரும்பும் நிலை உருவாகியுள்ளது.

அதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு வருகின்ற 01.12.2024 முதல் 08.12.2024 வரை மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 11 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு போட்டிக்கான மொத்த தொகை ரூ.2,20,000/-க்கான காசோலையை வழங்கினார்.

தென்கொரிய நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வாள்வீச்சு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வாள்வீச்சு வீராங்கனை பி.சசிபிரபாவுக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ.2,00,000/- க்கான காசோலையையும் வழங்கினார்.

தொடர்ந்து எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள பாரா பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ஜெகதீஸ்டில்லிக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ.1,79,184/-க்கான காசோலை என இன்று மொத்தம் 13 விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு மொத்தம் ரூ.5,99,184/-க்கான காசோலைகளை "TN Champions Foundation" அறக்கட்டளை நிதியில் இருந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article