ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 24 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 2வது இடம்

1 day ago 6

குமி: தென்கொரியாவில் உள்ள குமி நகரில் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து முலிடமும், ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3-வது இடமும் பிடித்தன.

கடைசி நாளான நேற்று இந்தியா 3 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:15.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 85.16 மீட்டர் தூரம் எட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (86.40) தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

மகளிருக்கான 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அபிநயா ராஜராஜன், சினேகா, ஸ்ரபானி நந்தா, நித்யா காந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 43.86 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் (20.32 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பூஜா (2:01.89 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் (56.46 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 24 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 2வது இடம் appeared first on Dinakaran.

Read Entire Article