ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், சிறைக் காவலர்களை ஆர்டர்லியாக பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒரு அறையில் 60 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 வார்டன்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 15 வார்டன்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் ஆர்டர்லியாக சிறைத்துறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.