ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் 1 லட்சம் லட்டுகள் விநியோகம்

3 weeks ago 5


குன்றத்தூர்: சென்னை அடுத்த குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சாமி திருக்கோயில் உள்ளது. தென் தணிகை என பக்தர்களால் போற்றப்படும் இக்கோயிலில் ஆயிரம் ஆண்டு பழமையானது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்கு செல்லும் வழியில் இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார். கந்தன் வழிபட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில் தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடிநீர், கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதி செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் மலை மீது வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மலையடிவாரத்தில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு தரிசனம் செய்த பக்தர் களுக்கு ஒரு லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோயில் செயல் அலுவலர் கன்யா, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் 1 லட்சம் லட்டுகள் விநியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article