ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

2 hours ago 1


துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலையில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், திரையரங்குகள், கோயில்கள் உள்ளன. இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் இந்த சாலையில் கந்தன்சாவடி முதல் செம்மஞ்சேரி வரை சாலையோரம் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகள் ஆபத்தான முறையில் சாலையில் நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து போக்குவரத்து போலீசார், சாலையோரம் மற்றும் நடைபாதை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்றும்படி அதன் உரிமையாளர்களிடம் பலமுறை கூறியும் அகற்றாததால் நேற்று பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் சோழிங்கநல்லூர் ராஜிவ் காந்தி சாலையில், சாலையோரம் மற்றும் நடைபாதையில் இருந்த கடைகளை அகற்றினர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் கூறுகையில், ‘ராஜிவ் காந்தி சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கடை உரிமையாளரிடம் கடைகளை அகற்றும்படி பலமுறை தெரிவித்தோம். ஆனால், யாரும் கடைகளை அகற்றவில்லை. இதனால் சர்வீஸ் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை முதல்கட்டமாக அகற்றியுள்ளோம். மறுமுறை கடைகளை வைத்தால் அபராதம் விதிக்கப்படும்,’ என்றனர்.

The post ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article