கோபி: கோபி மொடச்சூர் சாலையில் உள்ள கீழ்பவானி பாசன திட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூதிமடை பழையூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் அருண்குமார் (35). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவரது நிலத்தின் அருகில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்லும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மழை காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் காலங்களிலும் கசிவுநீர் மற்றும் மழைநீர் அருண்குமாரின் விவசாய நிலத்திற்குள் புகுந்து வருவதுடன், மழைநீர் வெளியேற முடியாத நிலையில் விவசாய பயிர்கள் சேதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதோடு, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 6 ஆண்டுகளாக அருண்குமார், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை என பலருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோட்டுப்புள்ளாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக அருண்குமாருக்கு சொந்தமான கரும்பு மற்றும் காளிபிளவர் பயிரிட்டுள்ள விவசாய நிலத்திற்குள் மழை நீர் புகுந்தது. மழை நீர் வெளியேறாததால் பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்துறைக்கு அருண்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் கீழ்பவானி பாசன திட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக அருண்குமார் மிரட்டல் விடுத்தார்.
அதை தொடர்ந்து மொடச்சூர் சாலையில் உள்ள 2 பொதுப்பணித்துறை அலுவலகங்கள், டிஎஸ்பி அலுவலகம், தாலுகா மற்றும் சப்-கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அருண்குமார், அவரது மனைவி மலர்விழி (25), மகள்கள் செந்தூரி (5), ஹாசினி (3) மற்றும் தாய் காளீஸ்வரி (60) ஆகியோருடன் கீழ்பவானி பாசன திட்ட பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் மண்ணெண்ணை இல்லை என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் மழைநீர் வெளியேற்றும் வரை போராட்டத்தை கைவிட முடியாது எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுப்பணித்துறை ஆபீஸ் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா: கோபியில் பரபரப்பு appeared first on Dinakaran.