ஆக்கிரமிப்பில் உள்ள 45 வீடுகளை இடிக்க எதிர்ப்பு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டும் வரை அவகாசம் வழங்க வேண்டும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு

2 days ago 2

விழுப்புரம், மே 15: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பவர் ஹவுஸ் சாலையில் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலும், சாலையோரம் 45 வீடுகளும் கட்டப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலை நிறுவன உரிமையாளர் தங்கள் நிறுவனத்திற்கு வாகனங்கள் சென்றுவர வழியில்லை என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் மற்றும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட கடந்த ஆண்டு ஜனவரி மாதமே உத்தரவிட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் மட்டும் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து வீடுகளை இடிக்க போதிய காலஅவகாசம் வழங்கிவிட்டு சென்றனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்து வந்த 45 குடும்பங்களுக்கும் விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரில் தலா 3 சென்ட் வீடு, இலவச வீட்டும னை பட்டா வழங்கப்பட்டது. அப்போது நாங்கள் புதிய வீடு கட்டி செல்லும் வரை இந்த இடத்தை காலி செய்ய போதிய அவகாசம் வழங்கவேண்டுமென்று கேட்டனர். அதற்கு ரயில்வே அதிகாரிகளிடம்பேசி பின்னர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஓரிருநாளில் இந்த வீடுகளை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தநிலையில் இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். எங்களுக்கு வீட்டு மனைபட்டா தற்போதுதான் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பை காலி செய்ய அவகாசம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். கடந்த ஆண்டே வீடுகளை இடிக்க உத்தரவிட்டு தற்போதுவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடமும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர உள்ளதால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டுமென்று தெரிவித்தனர். தொடர்ந்து ஆட்சியரை பார்க்க நீண்டநேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள 45 ஆக்கிரமிப்பு வீடுகளை இன்று அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நகராட்சி, வருவாய்த்துறை காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டிருந்தனர். இதனிடையே சில நிர்வாக பணி காரணமாக இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஆக்கிரமிப்பில் உள்ள 45 வீடுகளை இடிக்க எதிர்ப்பு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டும் வரை அவகாசம் வழங்க வேண்டும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article