ஆகாயத் தாமரைகளிலிருந்து பேப்பர் தயாரிக்கலாம்!

3 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக தற்போது இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். புது விதமான பொருட்களும் சந்தைக்கு வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் கழிவுகளிலிருந்துதான் அதிக பொருட்கள் தயாரித்து வருகிறார்கள். நமக்கு பயன்படாது என்ற பொருள் கூட ஏதோ ஒருவிதத்தில் நமக்கு மதிப்பு கூட்டும் பொருளாக மாறி வருகிறது. அப்படியான ஒன்றுதான் ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்கள் தயாரிக்கலாம் என்பதும். பல மாதங்களாக ஆய்வு செய்து ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பரை தயாரித்து இருக்கிறார் ஆராய்ச்சியாளரான சுஷ்மிதா.

‘‘எனக்கு சொந்த ஊர் கோவை. நான் ஏழாவது படிக்கும் போது என்னோட அப்பாவின் பணி மாறுதலுக்காக திருச்சி வந்துட்டோம். நான் வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். நாங்க குடியிருந்த வீட்டுக்கு அருகில் வயல்வெளி என்பதால் எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்றிருக்கும். தினமும் பள்ளிக்கு போகும் போது மரம், செடி, குளங்களை பார்த்து ரசித்துக் கொண்டு போவேன். அப்படிப்பட்ட இயற்கை சூழலில் வளர்ந்ததால் எனக்கு தாவரங்கள் குறித்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஈகாலஜி பிரிவு எடுத்து படிச்சேன். கல்லூரியில் படிக்கும் ேபாதுதான் ஆகாயத்தாமரைகள் குறித்து தெரிந்துகொண்டேன். சுமார் 150 வருடங்களுக்கு முன்புதான் இந்த தாவரம் இந்தியாவில் வளரத் துவங்கியுள்ளது. ஆகாயத்தாமரை, அந்தரத்தாமரை, வெங்காயத்தாமரை, குளிர்தாமரை, குழித்தாமரை, ஆகாயமூலி என்ற பெயர்களைக் கொண்ட இந்த ஆகாயத்தாமரை மூலிகையை ஆங்கிலத்தில் `Water hyacinth’ என்பார்கள். `Pistia Strateutes’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது நீரில் வாழும் தாவரம். ஏரி, குளம், குட்டை என நீர்த் தேங்கி இருக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் காணப்படும்.

நீர் தேக்கத்தில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படும். இவை கூட்டமாக முளைத்து தண்ணீர் முழுக்க ஆக்கிரமித்து மிதந்த நிலையில் இருக்கும். நீர் முழுக்க படர்ந்து இருப்பதால் அங்குள்ள தண்ணீரை எளிதில் ஆகாயத்தாமரைகள் ஆவியாக மாற்றிவிடும். ஒரு ஆகாயத்தாமரை செடி ஒரு லிட்டர் தண்ணீரை ஆவியாக்கும் தன்மை உடையது. இதனால், ஏரி, குளம், வயலில் தண்ணீர் தேங்குவதை இவை முற்றிலும் தடுப்பதால், விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதனாலேயே இந்தச் செடியினை அகற்ற சொல்லி பலரும் தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். இந்தச் செடிகளை அகற்றுவது சுலபம்.

ஆனால் அதில் உள்ள மிகவும் முக்கியமான சிக்கல் இவை அதிக அளவில் முளைப்பது. அவ்வாறு முளைக்கும் நீர்தேக்கத்தில் இருந்து அகற்றினாலும், எங்கு கொட்டுவது எவ்வாறு அதனை அழிப்பது என்பதுதான் பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னை குறித்து கேள்விப்பட்ட போது, அதில் ஏதாவது புதிதாக செய்ய முடியுமா என்று ஆய்வில் இறங்கினேன்’’ என்றவர், ஆகாயத்
தாமரைகள் கொண்டு என்ன பொருட்களை தயாரிக்கலாம் என்று பேசத் தொடங்கினார்.

‘‘நான் ஆகாயத்தாமரைகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கியதும் அதில் என்னவெல்லாம் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து தேடலில் ஈடுபட ஆரம்பித்தேன். பல நாடுகளில் அது சார்ந்து நடைபெறும் கருத்தரங்கங்களுக்கு சென்றேன். அங்கு எனக்கு பல விஷயங்களுக்கான ஓப்பனிங்காக இருந்தது. ஒரு முறை வெளிநாடு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் நார்களை கொண்டு கூடைகள் பின்னுவதைப் பார்த்தேன். அந்த நார் என்ன என்று விசாரித்த போதுதான் அது ஆகாயத்தாமரையின் நார் என்று தெரியவந்தது.

ஆகாயத்தாமரைகளில் கூடைகள் மட்டுமின்றி பல வகையான பொருட்களை தயாரிக்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூடைகள், ஜன்னல் கதவுகளை மூடும் பேப்பர்கள், மேட்கள் போன்றவற்றை தயாரிக்கிறார்கள். இந்தியாவில் அசாம், ஹம்பி போன்ற மாநிலங்களில் ஆகாயத்தாமரைகளில் கூடைகள் பின்னுகிறார்கள். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இயற்கை சார்ந்து பொருட்களை தயாரிப்பவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பல பெண்கள் ஆகாயத்தாமரைகளை வைத்து பலவிதமான பொருட்கள் செய்து கொண்டிருந்தனர்.

ஆகாயத்தாமரை மூலம் பல பொருட்களை தயாரிக்க முடியும் என்றால், இந்த தாவரம் ஏன் மக்களுக்கு தொந்தரவாக உள்ளது. பல இடங்களில் படர்ந்து வளரும் இதனை அறுவடை செய்து பல உபயோகமான பொருட்களை தயாரிக்கலாமே என்று நான் அவர்கள் முன் என் மனதில் எழுந்த கேள்வியினை வைத்தேன். அதற்கு அவர்கள். இந்த தாவரம் வேகமாக வளரக்கூடியது. இதனை அதிகளவு பயன்படுத்தி நிறைய பொருட்களை தயாரித்தால்தான் இதற்கான தீர்வு காண முடியும் என்றார்கள்.

சர்வதேச சஸ்டெயினபிலிட்டி அகாடமியில் கடந்த வருடம் ஜெர்மனிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த அகாடமியில் ஒவ்வொரு வருடமும் ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள் 12 பேரை தேர்வு செய்து ஜெர்மனிக்கு அழைத்து செல்வார்கள். அதில் நானும் தேர்வானேன். ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்பம் ஆய்வகங்கள் நவீனமானது. அங்கு சென்றால் ஆகாயத்தாமரைகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய உதவியாக இருக்கும். அதனால் அங்கு ஒன்பது மாதங்கள் தங்கி ஆகாயத்தாமரை குறித்த ஆய்வில் ஈடுபட்டேன்.

அதில் ஆகாயத் தாமரைகளில் இருந்து பேப்பர் தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். ஆகாயத்தாமரைகளை கூழாக்கி, அதை காயவைத்து பேப்பர் தயாரிக்கலாம் என்று கண்டறிந்தவுடன், அதை தயாரித்தும் பார்த்தேன். நல்ல தரமான பேப்பர்கள் கிடைத்தது. இதில் பேப்பர்கள் மட்டுமில்லாமல் பேப்பர் பிளேட்டுகள், ஸ்பூன்கள், முட்டை வைக்கும் அட்டைகள், கூடைகள் என பல பொருட்களையும் செய்யலாம். இதனைத் தொடர்ந்து சானடரி நேப்கின்கள் தயாரிப்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகிறது.

ஒரு பேப்பர் செய்ய அதிகளவு தண்ணீர் தேவைப்படும். இந்தச் செடிகள் தண்ணீரில் வளர்வதால் இவற்றில் தண்ணீர் தன்மை அதிகமாக இருக்கும். அதனால் இதில் பேப்பர் தயாரிப்பது எளிது. நீர்த்தேக்கத்தில் விளையும் இவை பெரும்பாலும் கழிவாக குப்பைகளுக்கு செல்கின்றன. அதனை வீணாக்காமல் மதிப்புகூட்டும் பொருளாக மாற்றலாம். நாம் அதிகமாக உபயோகிக்கும் பேப்பர்களுக்காக மரத்தினை வெட்டுவதற்கு பதில் இதிலிருந்து தயாரிக்கலாம்.

ஒரு பக்கம் இயற்கையை பாதுகாக்க முடியும். மறுபக்கம் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமையும். இயற்கை சார்ந்து தயாரிக்கும் பொருட்கள் பயன்படுத்துமாறு உலகளவில் வலியுறுத்தப்படும். இந்த நிலையில் இதனை கற்றுக் கொண்டு தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். நான் பல பெண்களுக்கு ஆகாயத்தாமரை மூலம் பேப்பர்கள் தயாரிப்பது குறித்து சொல்லிக் கொடுத்துள்ளேன்.

இயற்கை சார்ந்து பொருட்கள் தயாரிப்பதற்கு அரசு மானியமும் கொடுக்கிறது. பெண்கள் சுய உதவிக்குழுக்கள் முன்வந்து இதை ஒரு தொழிலாக முன்னெடுத்தால் அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். இதன் மூலம் இயற்கையை பாதுகாக்க முடியும், பிளாஸ்டிக்கில் இருந்து விடுதலை கிடைக்கும்’’ என்கிறார் சுஷ்மிதா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

 

The post ஆகாயத் தாமரைகளிலிருந்து பேப்பர் தயாரிக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article