
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து உள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்டு 1-ந்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட புதிய வரிவிதிப்பு தொடர்பான கடிதத்தை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். இது வரை 22 நாடுகள் மீதான வரி அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்காளதேசம், மலேசியா, ஜப்பான், உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப அறிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் சமூகவலை தள பக்கத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது,
அமெரிக்காவிற்கு எதிராக நிதி ரீதியாக பழிவாங்கினாலும் அமெரிக்கா கனடாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. கனடாவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா தொடரும். கனடா முக்கிய பிரச்சினைகளுக்கு ஒத்துழைக்க தவறியதால் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது.அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்து விட்டது. இந்த புதிய வரி விதிப்புகளை கனடா ஏற்றுக் கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கை எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த வரி விதிப்பு ஆகஸ் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக் வரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி விதிப்புக்கு கனடா என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்ப எகிறி உள்ளது.