சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் இந்தியா 4- என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பினார். 5 போட்டிகளில் விளையாடி 2 டக் அவுட் உட்பட மொத்தம் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். மேலும் கடந்த 10 போட்டிகளாகவே அவர் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி பெரிய அளவில் தோல்விகளை சந்திக்காததால் அவர் மீது விமர்சனங்கள் எழவில்லை. மறுபுறம் சஞ்சு சாம்சனும் இந்த தொடரில் தடுமாறினார்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் தனது அணுகுமுறையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சாம்சன் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் ஒரே பந்து, அதே பீல்டிங் செட் அப், அதே ஷாட், அதே தவறு செய்து அவுட் ஆனார்கள். 1 அல்லது 2 போட்டிகளில் இது போன்ற தவறுகள் நடந்தால் பரவாயில்லை. ஆனால் இது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கு எதிராக ஒரு தந்திரோபாயம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால், அதற்கு பதிலைக் கண்டுபிடிப்பது உங்கள் பொறுப்பாகும். ஆனால் எங்கள் வீரர்களிடமிருந்து இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
சூர்யா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். ஆனால் அவர் தனது பேட்டிங்கில் அணுகுமுறையை கொஞ்சம் மாற்ற வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.