
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் எம்.பி சசிதரூருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் சமீப காலமாக நல்லுறவு இல்லை. ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார் சசி தரூர். இதனால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசி தரூரின் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை சசி தரூரை நேரடியாக விமர்சிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக விமர்சித்து வருகிறார்கள். அதேவேளையில், சசி தரூரும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக மறைமுகமாக பேசி வருகிறார். இதனால் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில், எமெர்ஜென்சி நிலை குறித்து சசி தரூர் எழுதிய கட்டுரை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சசி தரூர் கூறியிருப்பதாவது:
அவசரநிலை ஒரு தற்காலிக ஒழுங்கை கொண்டு வந்தது என்றும், ஜனநாயக அரசியலின் சீர்குலைவிலிருந்து நிவாரணத்தை வழங்கியது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால், இந்த விதிமீறல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் சர்வாதிகாரமாக மாறியதன் விளைவாகும். அவசரநிலையின் போது எந்த ஒழுங்கு தோன்றியிருந்தாலும், அது நமது குடியரசின் ஆன்மாவின் விலையில் வந்தது ஆகும்' என குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில் அவசர நிலை கொண்டு வந்த இந்திரா காந்தியை 1977-ல் மக்கள் நிராகரித்து பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவித்து இருக்கிறார். இன்றைய இந்தியா 1975-ம் ஆண்டு இந்தியா போல இல்லை என கூறியுள்ள சசிதரூர், நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிக வளர்ச்சியடைந்தவர்களாகவும், பல வழிகளில் வலுவான ஜனநாயகமாகவும் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
சசிதரூரின் இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறுகையில், 'சக தலைவர் ஒருவர் பா.ஜனதா குரலில் வார்த்தைக்கு வார்த்தை பேசத்தொடங்கும்போது, 'பறவை கிளியாக மாறுகிறதா' என்றுதான் யோசிக்க தோன்றுகிறது' என்று தெரிவித்தார்