அழகு முருகனின் அபூர்வ தரிசனம்

3 months ago 17

* மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது திருவிடைக்கழி. இங்குள்ள முருகன் கோயிலில் குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
* மாம்பழத்திற்காக கோபம் கொண்டு பழனியில் ஆண்டிக் கோலம் பூண்ட முருகப் பெருமான் ‘திருநள்ளாறு’ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்தோடு காட்சி தருகிறார்.
* சென்னிமலை முருகர் கோயிலில் உள்ள இறைவனுக்கு இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் உள்ளனவாம். மேலும், இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லையாம்.
* கர்நாடக மாநிலத்தில் உள்ளது ‘காட்டி சுப்ரமணியா’ எனும் தலம். இங்குள்ள ஆலயத்தில் முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கிறாராம். இங்குள்ள பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் யாரும் பாம்பைக் கண்டால் துன்புறுத்துவதில்லை.
* கர்நாடகா மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகர் தலைக்கு மேல் ஐந்து தலை நாகமும் குடைபிடிக்க பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.
* கும்பகோணத்தில் உள்ள ‘‘வியாழ சோமநாதர்’ ஆலயத்தில் கந்தப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.
* திருக்கடையூர் அருகில் உள்ள திருவிடைக்கழி முருகன் கோயில் சிவாலய வடிவில் உள்ளது. சிவபெருமான் உருவாக இங்கு முருகன் வீற்றிருப்பதாக ஐதீகம். முருகப் பெருமான் நின்ற கோலத்தில் காட்சி தர அவருக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவில் சிவன் அருள் புரிகிறார்.
* திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமானின் மூல விக்கிரகம் வித்தியாசமானது. கந்தன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும் வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.
* நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.
* ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை’ எனுமிடத்தில் உள்ள முருகன் கோயிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல்’ மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்யாசமான ஆலயமிது.
* மகாபலிபுரம் அருகே ‘வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் சந்நதியில கண்ணீர் வடித்த நிலையில் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார்.
* மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக் குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.
* திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.
* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ‘ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் இறைவன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறுகரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
* கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
* செம்பனார் கோயில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் ‘ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்க மாலை கொண்டு தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.
* தனது மாமன் திருமாலைப் போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்த காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் ‘‘அழகாபுத்தூர்’’ என்ற இடத்தில் உள்ளது.

The post அழகு முருகனின் அபூர்வ தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article