அழகாக இருப்பதை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? குழந்தை முதல் பாட்டி வரை அழகு நிலையம் செல்வது என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. இன்றைய நவீன யுகத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு மட்டுமில்லாது பிறந்தநாள், மெஹந்தி விழா, நிச்சயதார்த்தம், கெட் டூ கேதர், பார்ட்டிகள் என அனைத்து விழாக்களுக்கும் மேக்கப் போடுவது சாதாரணமான வழக்கமாகவே ஆகிவிட்டது. இதனால் அழகு நிலையங்களுக்கான தேவைகளுமே அதிகமாகி விட்டது. இன்றைய பெண்களுக்கு வீட்டிலிருந்த படியோ அல்லது பார்லர் வைத்தோ செய்யக்கூடிய அழகுக்கலை துறை நல்ல வருமானத்தினை பெற்றுத் தருவதோடு நிறைய தன்னம்பிக்கையை தருகிறது என்கிறார் தென்காசி ராவண சமுத்திரம் பகுதியில் அழகு நிலையம் வைத்து அசத்தி வரும் லிசரத் ஷெரின்.
அழகுக்கலை துறையில் ஆர்வம் ஏற்பட காரணங்கள் என்ன?
சிறுவயதில் இருந்து அழகுக் கலை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன்பிறகு முறையாக இதில் பயிற்சி பெற்றேன். பிறகு சொந்தமாக ஒரு பார்லர் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் துவங்கியது தான் எங்களது அழகு இல்லம். தற்போதைய சூழலில் இதற்கான தேவைகளும் வருமான வாய்ப்புகளும் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பான சிறந்த தொழில் இது. நான் பத்து வருடங்களாக இதில் சாதித்து வருகிறேன். என் கணவர் எனது தொழிலுக்கு மிகுந்த ஊக்கம் அளித்து வருவதால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு என்னால் பயணிக்க முடிகிறது. புடவை கட்டுதல், மெஹந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், ப்ளீச்சிங், பெடிக்யூர், மேனிக்யூர், புருவம் திருத்துதல், ஆயில் மசாஜ், சரும மற்றும் முடி பராமரிப்புகள், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், த்ரெட்டிங் போன்ற பல்வேறு நல்ல விஷயங்கள் அழகுத் துறையில் இருக்கின்றன.
அழகுக்கலை குறித்த உங்கள் பார்வைகள் என்ன?
இப்பொதெல்லாம் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணுக்கு மட்டும்தான் அலங்காரம் செய்வார்கள் என்கிற நிலை இல்லை. எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் வீட்டில் உள்ள அனைவருமே மேக்கப் போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள்.நாம் ஒவ்வொருவருமே நம்மை அழகு படுத்திக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று தான். ‘‘பளிச்”சென்ற அழகுத்தோற்றம் நமது உற்சாகத்தினை பல மடங்கு அதிகரிக்குமே. தன் அழகை மேம்படுத்துவதால் பெண்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகிறது. மேலும் தங்கள் உடல் நலன் மீது அக்கறை மற்றும் உடல் நலனை பேணிக்காப்பது பற்றி விழிப்புணர்வும் ஏற்படுகிறது. தற்போது மணப்பெண்ணுக்கு நிகராக மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பதால், அவர்களும் மேக்கப், உடை மற்றும் ஆபரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். எங்களுக்கு தற்போது எல்லா நாட்களிலும் வேலை கிடைக்கிறது.
பெண்களுக்கு நல்ல வருமானம் ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் உள்ளதா?
நிச்சயமாக. மணப்பெண்களுக்கோ விழாக்களுக்கு செல்பவர்களுக்கோ புடவை கட்டி விடுவதில் கூட தற்போது நல்ல வருமானம் கிடைக்கிறது. புடவை கட்டுவதற்கே தனியான பயிற்சி வகுப்புகள் உண்டு. அதிலும் வருமானத்தை ஈட்டலாம். திருமண நிகழ்விலேயே சென்று மேக்கப் செய்வதின் மூலமாக கணிசமான வருமானங்கள் பார்க்கலாம். மணப்பெண் அலங்காரத்திற்கு என்றே தனி பயிற்சி வகுப்புகள் நிறைய இருக்கின்றது. அத்தொழிலிலும் நல்ல வருமான வாய்ப்புகள் உண்டு. பொதுவான அழகுக்கலை பயிற்சி எடுத்தாலும் வீட்டிலிருந்தோ அல்லது பார்லர் வைத்தோ அல்லது வாடிக்கையாளர்கள் இடத்திலோ சென்று நமது தொழிலை நல்ல முறையில் நடத்தலாம். நமது கற்றுக் கொள்ளும் ஆர்வமும் விடா முயற்சியும் தனித்திறமையும் தொழிலில் நாம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். பெண்களுக்கு ஏற்ற தொழில் இது. தற்போது தினந்தோறும் வளர்ந்துவரும் அழகுக் கலை பற்றிய புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதும் மிகவும் அவசியம்.
வீட்டிலேயே நம்மை அழகுபடுத்தி கொள்ளலாமா?
நமது சமயலறை பொருட்களை வைத்தே கூட நம்மை அழகுபடுத்திக் கொள்ள முடியும். முகம் பொலிவாக இருக்க இயற்கையான சில டிப்ஸ் (Bleach) களை சொல்கிறேன். இதைத் தொடர்ந்து செய்தாலே முகம் பொலிவு பெறும். உருளைக்கிழங்கு ஜூஸ், முல்தானி மெட்டி, தயிர், கற்றாழை (Alovera) மற்றும் தேன் எல்லாவற்றையும் கலந்து இருபது நிமிடம் (face pack) போட்டால் முகம் பொலிவாக இருக்கும்.முகம் அழகு மற்றும் நிறம் பெற கேரட் ஜூஸ் மற்றும் தேங்காய் பால் கலந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்தால் (healthy fact) உடலுக்கும் நல்லது . மேலும் முகம் அழகாகவும் நிறமாகவும் இருக்கும். குறைந்த பட்சம் எட்டு மணி நேர உறக்கமும் நிறைய தண்ணீர் குடிப்பதும் நமது ஆரோக்கியத்துடன் கூடிய சரும பொலிவுக்கு உதவும். எனக்கு சிறுவயதில் இருந்து அழகுக் கலையினை கற்க வேண்டும் என்கிற ஆர்வமும், அதன் மீது இருந்த ஈர்ப்பும், விடா முயற்சியும் கடின உழைப்பும் என் குடும்பத்தாரின் உறுதுணையுடனும், என் கணவரின் ஒத்துழைப்பும் என் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக அமைந்தது. என்னை பார்த்து நிறைய பேர் இத்தொழிலுக்கு வரவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இத்தொழிலுக்கு வரலாம். முறையான பயிற்சியுடன் திறமையாக செய்தால் வெற்றி நமக்கே உரியதாகும் என நம்பிகையுடன் பேசுகிறார் லிசரத் ஷெரின்.
– தனுஜா ஜெயராமன்.
The post அழகு தன்னம்பிக்கை தரும் அழகுக்கலை நிபுணர் லிசரத் ஷெரின்! appeared first on Dinakaran.