காரியாபட்டி, பிப்.6: காரியாபட்டி ஒன்றியம் அல்லாளப்பேரியில் இருந்து முடுக்கன்குளம் பச்சேரி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தார்சாலை அமைத்து பல ஆண்டுகளாகி விட்டது. மாணிக்கவாசகர் கோவில் முதல் அழகிய நாயகியம்மன் கோவில் வரை தார்ச்சாலை போடப்பட்டது. இந்த தார்ச்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அல்லாளப்பேரி அழகிய நாயகியம்மன் கோவிலில் இருந்து பச்சேரி கிராமம் வரை செல்லும் சாலை மண் சாலையாக இருந்து வருகிறது. இதில் அல்லாளப்பேரி, பச்சேரி சாலை வழியாக முடுக்கன்குளம் செல்லும் சாலையில் உள்ள ஓடையில் பாலம் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி, வெற்றிலை முருகன்பட்டி, செட்டிகுளம், இசலிமடை, மேல காஞ்சிரங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாக முடுக்கன்குளம் கிராமத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர். முடுக்கன்குளத்தில் அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, வாரச்சந்தை செல்பவர்களும் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். பாலம் வசதி இல்லாததால் அவசர காலத்தில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அல்லாளபேரி-முடுக்கன்குளம் சாலையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.