அற்புதங்கள் நிகழ்த்திய அனுமந்தராயன்

2 weeks ago 5

வருடா வருடம் சென்னை மயிலாப்பூரில் ஒன்பது நாட்கள் ஸ்ரீராமநவமி உற்சவம் நடக்கும். உற்சவத்தின் ஒன்பது தினங்களிலும் ஸ்ரீராம மூல மந்திர ஜபத்துடன் விசேஷ ஹோமம் செய்து வழக்கம். மாலை வேளையில் தினமும் இன்னிசைக் கச்சேரிகள் நடக்கும். உற்சவ பூர்த்தி நாளன்று ஸ்ரீசீதா-ராம திருமூர்த்தங்களுக்கு ஆகம ரீதியாக திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கப்படும்.அந்த வருடம் கமிட்டியில், ஸ்ரீராமனுக்கு லட்சார்ச்சனை நடத்துவது என்றும், பூர்த்தி நாளன்று ஸ்ரீசீதா-ராம திருக்கல்யாண உற்சவத்தை பாகவத (பஜனை) சம்பிரதாயப்படி செய்வது என்றும் முடிவாயிற்று.

டாஃபே மகாதேவன் என்பவரை உற்சவ கமிட்டியின் கௌரவத் தலைவராகப் போட்டிருந்தோம். அவர் பரம ஆஸ்திகர். வருடா வருடம் உற்சவம் நடத்த நிறைய பொருளுதவி செய்து வந்தார். லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக 150 கிராம் எடையில் லட்டு ஒன்று அளிப்பது வழக்கம். அந்த வருடம் திடீரென சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. ஒரு மூட்டை (100 கிலோ) 1,400 ரூபாய்! லட்சார்ச்சனைக்கு மூன்று மூட்டை சர்க்கரை வேண்டும். கையில் போதுமான பணம் இல்லை.ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த மகாதேவனைச் சந்தித்து, நிலைமையைக் கூறி பணம் பெற்று வரலாம் என்று புறப்பட்டேன். உடல் நலக்குறைவு காரணமாகக் கட்டிலில் படுத்திருந்தார் அவர். ‘என்ன விஷயம்?’ என்று கேட்பது போல புருவத்தை மேலே உயர்த்தி தலையை ஆட்டினார்.

இந்தச் சூழ்நிலையில் அவரிடம் விஷயத்தை சொல்வதா…. வேண்டாமா எனத்தயங்கினேன்.திடீரெனக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்த அவர், ‘‘ரமணி அண்ணா…. எனக்கு ஒடம்பு சரியில்லே. நாலு நாளா படுத்துண்டிருக்கேன்…. என்ன விஷயம்? சொல்லுங்கோ!’’ என்றார் சுரத்தில்லாமல்.நான் தயங்கியபடி, ஸ்ரீ ராம நவமி ஏற்பாடெல்லாம் ரொம்ப நன்னா நடந்துண்டிருக்கு. ஆனா… லட்சார்ச்சனை பண்றதுக்குத்தான்…..’’ என்று நான் முடிப்பதற்குள், ‘‘ராமநவமி உற்சவத்துக்கு வழக்கப்படி மூவாயிரம் ரூவா அனுப்பிச்சு வெச்சுட்டேனே… அப்புறமென்ன?’’ என்று கேட்டார்.

நான் தயங்கியபடி குரலைத் தாழ்த்திக் கொண்டு, ‘‘மகாதேவன் சார்… அந்த ரூவா வந்து சேர்ந்துடுத்து. அதவெச்சுத்தான் எல்லா ஏற்பாடும் பண்ணிண்டிருக்கேன். ஆனா பாருங்கோ திடீர்னு சர்க்கரை விலை ஏறிடுத்து! லட்சார்ச்சனை பிரசாதமா நாம லட்டு கொடுக்கிற பழக்கம் வெச்சுண்டிருக்கோம். அதான். ஒங்களப் பாத்து விஷயத்தைச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!’’ என்று ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னேன். சற்று நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை.

திடீரென்று என்னைப் பார்த்து அவர், ‘‘ஏன் ரமணி அண்ணா…. ‘என்ன விலை வித்தாலும் சர்க்கரைய வாங்கி லட்டு புடிச்சு நிவேதனம் பண்ணினாத்தான். நான் லட்சார்ச்சனை பண்ணிப்பேன்!’னு ராமன் பிடிவாதம் புடிக்கிறானா என்ன?’’ என்றார்.இதற்கு என்ன பதிலளிப்பது என்று புரியவில்லை என்னையும் அறியாமல் கண்களில் நீர் சுரந்தது. சமாளித்துக் கொண்டு, ‘‘நீங்க சொல்றாப்ல ராமச்சந்திரமூர்த்தி அப்படியெல்லாம் கேக்கலை சார்…. வருஷா வருஷம் வழக்கமா லட்டு பண்ணி லட்சார்ச்சனை செஞ்சுண்டு வர்றதால…. இந்த வருஷமும், அதை விட்டுடாம பண்ணிடணும்கற ஆசை’’ என்று நான் முடிப்பதற்குள், ‘‘இந்த வருஷம் லட்டுக்கு பதிலா சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு பழத்தை நிவேதனம் பண்ணி, லட்சார்ச்சனை பிரசாதமா பக்தாளுக்குக் குடுங்கோ… ராமன் ரொம்ப சந்தோஷப்படுவார்!’’ என்று கூறிய அவர், ‘கொத்தவால்சாவடி மார்க்கெட்டுக்குப் போனேன்னா ‘ஹோல்சேல்’ல சாத்துக்குடி மலிவா கிடைக்கும்….’’ என்று சொல்லி விட்டு படுத்துவிட்டார்.

அவர், அப்படி மறுத்துச் சொல்லக் கூடியவர் அல்ல. ஒன்று என்றால் பத்தாகச் செய்வார். ‘உடல் நலக் குறைவு காரணமாக இன்று அப்படிப் பேசியிருப்பார்’ என சமாதானப்படுத்திக் கொண்டேன். மதியம் எனக்கு ஒரு போன்கால் வந்தது. மறுமுனையில் பேசியவர், ‘‘நான் வைத்ய சுப்ரமணிய ஐயர் பேசறேன்…. ரமணி ஐயரோட பேச முடியுமா?’’ என்றார். எனக்குக் கை கால் ஓடவில்லை. படபடக்கும் நெஞ்சோடு, ‘தர்மாத்மா வைத்திய சுப்ரமணிய ஐயரா…. ரொம்ப சந்தோஷம். நான் ரமணி தான் பேசறேன்….’’ என்று நடுங்கினேன்.உடனே மறுமுனையில் அவர், ‘‘ஒங்கள இதுவர நான் நேர்ல சந்திச்சதில்லே. ஒரு முக்கிய விஷயம் பேசணும்…. சாயந்திரம் வாங்கோ, வெங்கட கிருஷ்ணய்யரோட….’’ என்று கூறி போனை வைத்து விட்டார்.

அன்று மாலை சரியாக மணி ஐந்து. தர்மாத்மா வைத்திய சுப்பிரமணிய ஐயர் வீட்டில் இருந்தேன். வரவேற்று அமர வைத்தார். பட்டென்று அவர், ‘‘நீங்க சிருங்கேரி ஸ்ரீமகா சந்நிதானத்துக்கு சமீபத்ல ஏதாவது கடுதாசு போட்ருந்தேளா?’’ என்று கேட்டார்.உடனே, ‘‘ஆமாம்… போட்டிருந்தேன்’’ என்றேன்.அவர், ‘‘சமீபத்துல நான் சிருங்கேரி போயிருந்தேன். மகாசந்நிதானம் ஒங்க லெட்டர்ல இருந்த விஷயத்தயெல்லாம் சொன்னா…. நெறய தர்ம கைங்கர்யம் பண்ணிண்டிருக்கிற மடத்தோட பிரிய சிஷ்யரான டாஃபே மகாதேவனுக்கு, நீங்க ஸ்ரீராம நவமி உற்சவத்ல சால்வை போத்தி கௌரவிக்கப் போறதாகவும்… அதுக்கு மகா சந்நிதானத்தின் பூர்ண அனுக்கிரகத்தையும் பிரார்த்திச்சிருந்தேளாம். அதுக்கு…. ‘அவா’ என்ன பண்ணியிருக்கா தெரியுமோ?’’ என்று கூறி சற்று நிறுத்தினார்.

உடனே நான் ஆர்வத்தோடு, ‘‘சொல்லுங்கோ’’ என்றேன்.அவர் தொடர்ந்தார்: ‘‘சால்வை வாங்கற செலவக் கூட மகா சந்நிதானம் ஒங்களுக்கு வைக்கலை. ஒரு ஒசந்த பட்டுப் பீதாம்பரத்தையும், அனுக்கிரக பிரசாதத்தையும் எங்கிட்டக் கொடுத்து, ‘அந்த ஸ்ரீராமநவமி உத்சவத்ல என் சார்பா ஒங்கையாலே மகாதேவனுக்குப் போர்த்தி விடு’னு சொல்லியனுப்பினார். மகா சந்நிதான உத்தரவை நான் எங்கையாலயே நிறைவேத்தலாமோலியோ?’’

‘‘பேஷா! நீங்க போத்தறது ரொம்ப விசேஷம். ஸ்ரீராமநவமி உற்சவ துவக்க விழாவுக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் நடராஜனை தலைமை தாங்கக் கூப்படலாம்னு இருக்கேன். நீங்க விழாவை ஆரம்பிச்சு வெச்சு, மகாதேவனையும் கௌரவரப்படுத்திடுங்கோ… எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டு வந்து ஒங்களப் பாக்கறேன்!’’ என்று சொல்லி உத்தரவு வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.
இல்லத்தை அடைந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது!

யாரோ ஒருவர் வந்து கொடுத்துவிட்டுப் போனதாக என் மனைவி ஒரு கடிதத்தையும், ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தாள். கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். டாஃபே மகாதேவன் எழுதியிருந்தார். அதில், ‘ரூபாய் 5,000 அனுப்பியுள்ளேன். நீங்கள் கூறியபடி சர்க்கரை மூட்டைகள் வாங்கி லட்டு பிரசாதம் செய்து விடவும். விவரம் பிறகு சொல்கிறேன்!’ என்று இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அடுத்து, பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீசீதா-ராம திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக, ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீராமச்சந்திர பாகவதர் கோஷ்டியை ஏற்பாடு செய்து விட்டு உற்சவத் துவக்க விழாவுக்கான தினத்தையும் முடிவு செய்தேன்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்திய சுப்பிரமணிய ஐயர் விழாவைத் துவக்கி வைத்து, டாஃபே மகாதேவனுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பது என ஏற்பாடாயிற்று.
துவக்க விழா அழைப்பிதழ் அச்சாகி வந்தது. மகாதேவனுக்கு முதலில் அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேரில் சென்றேன். அவர் வீட்டில் இல்லாததால் அவர் மனைவியிடம் அளித்துவிட்டுத் திரும்பினேன். அடுத்து ஜஸ்டிஸ் நடராஜனை அழைத்துவிட்டு, வைத்திய சுப்பிரமணிய ஐயர் இல்லத்துக்குச் சென்றேன்.

துவக்க விழா அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டவர், ‘‘நான் சரியா எத்தனை மணிக்கு அங்கே இருக்கணும்?’’ என்று கேட்டார். ‘‘துவக்க விழா அன்னிக்கு நீங்க சரியா மாலை 6.25-க்கு மேடைல இருந்தா போதும்…. நிகழ்ச்சிகள் கரெக்டா 6.30 மணிக்குத் துவங்கும்!’’ என்றேன்.‘பேஷ்….பேஷ்! அதுதான் எனக்கும் வசதி. எனக்கு உற்சவம் நடக்கற எடம் தெரியாதோல்லியோ…. அதனால யாராவது வந்து என்னை அழைச்சிண்டு போகணும்….. என்ன?’’‘‘நானே வந்து அழைச்சிண்டு போறேன்….’’ என்று சொல்லி விடைபெற்றேன்.

துவக்க விழா அன்று மாலை. ஐந்து மணியிருக்கும். நீதிபதி நடராஜன் வீட்டிலிருந்து ஒரு போன்கால். அவரின் உதவியாளர், ‘‘ஜட்ஜ் சார் அர்ஜண்டா இன்னிக்கு ராத்திரி எட்டு மணி ‘ப்ளைட்’டுல டெல்லி போகணும். அதனால, சரியா ஆறு மணிக்கே துவக்க விழாவை வெச்சுக்கச் சொல்லிட்டாங்க. ஐயா சரியா அஞ்சே முக்காலுக்கு விழா மேடைல இருப்பாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிக்குங்க….’’ என்று கூறி போனை வைத்து விட்டார்.

என்ன செய்வதென்று புரியாமல் உடனே டாஃபே மகாதேவனுக்கு போன் போட்டு நிலைமையைச் சொன்னேன். புரிந்து கொண்ட அவர், ‘‘என்னைப் பத்தி கவலைப்படாதீங்கோ. அஞ்சே முக்காலுக்கு வந்துடறேன். வைத்திய சுப்பிரமணிய மாமாவை பார்த்து விஷயத்தைச் சொல்லி அழைச்சிண்டு வந்துடுங்கோ….’’ என்று சொல்லி போனை வைத்தார்.அப்போது மணி சரியாக 5.20. அடுத்த பத்தாவது நிமிடம் வைத்திய சுப்பிரமணிய ஐயர் இல்லத்தில் நின்றேன். யதேச்சையாக வாசலுக்கு வந்த அவர், ‘‘என்ன ரமணி ஐயர்…. இன்னும் மணி ஆகலியே! அதுக்குள்ள வந்துட்டேளே. என்ன விஷயம்?’’ என்று குரலைச் சற்று உயர்த்திக் கேட்டார். மென்று விழுங்கியபடி அவரிடம் விஷயத்தை விளக்கினேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது.

‘‘என்னால அப்டி நெனச்சபடியெல்லாம் வர முடியாது. ரெகுலரா சாயரட்சை சந்தியா வந்தன அனுஷ்டானமெல்லாம் வெச்சுண்ருக்கேன்… அதையெல்லாம் முடிக்காம நா வௌில கிளம்பற வழக்கம் இல்லே! நீங்க ஆறரை மணின்னு சொன்னதால ‘சரி’னு ஒப்புக் கொண்டேன். அனுஷ்டானத்தை எல்லாம் விட்டுட்டு என்னால அஞ்சே முக்காலுக்கெல்லாம் வரவே முடியாது. அதனால இப்போ நீங்க கௌம்பிப் போகலாம்!’’ என்று பொரிந்து தள்ளிவிட்டு விடுவிடுவென உள்பக்கம் நடையைக் கட்டினார். செய்வதறியாமல் திரும்பி விட்டேன்.
மணி 5:50. உற்சவ அரங்கு நிரம்பி வழிந்தது. உட்கார இடமில்லை.

ஜஸ்டிஸ் நடராஜன் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். தொடர்ந்து டாஃபே மகாதேவன் மேடை ஏறினார். அவரிடம் காதோடு காதாக நடந்ததை விவரித்தேன். அவரும் கவலைப்பட்டார். ஜஸ்டிஸ் நடராஜன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்தார்.மணி 5:55. நான் கைகளைப் பிசைந்தபடி நின்றேன். திடீரென அரங்க வாசலில் ‘பிளைமவுத் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்!

அவர்-ஸ்ரீமான் வைத்திய சுப்பிரமணிய ஐயர்! சரியாக 5:58-க்கு மேடை ஏறிய அவர் புன்முறுவலுடன் தலையைத் தடவிக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்தார்.
மணி சரியாக 6:00. இறை வணக்கத்துடன் விழா துவங்கியது. நான் வரவேற்புரை நிகழ்த்திவிட்டு நகர்ந்தேன். நீதியரசர் தலைமை உரையாற்றிவிட்டு, டாஃபே மகாதேவனுக்கு சால்வையைப் போர்த்திப் பாராட்டி உரையாற்றும்படி ஐயரைக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிருங்கேரி மகா சந்நிதானம் அனுக்கிரகித்து அளித்த சால்வையை மகாதேவனுக்கு போர்த்திவிட்டுப் பேச ஆரம்பித்தார் ஐயர்.

‘‘இந்த விழா ஒரிஜினல் புரொக்ராம்படி ஆறைரைக்குத் தான் துவங்கி இருக்கணும். கனம் நீதிபதி அவர்கள் அவசரமா எட்டு மணி ப்ளைட்ல டெல்லி போக வேண்டிய நிர்ப்பந்தத்தால் அரை மணி முன்னால வெச்சுக்க வேண்டியதா ஆயிடுத்து. இப்போ நேக்கு அது புரியறது! சாயந்திரம் அஞ்சே கால் மணி வாக்கில் ரமணி ஐயர் ஓடி வந்து விஷயத்தை வெவரிச்சு என்னை கூப்பிட்டார்.

‘சாயரட்சை அனுஷ்டானத்தை எல்லாம் விட்டுப்டு அப்டியெல்லாம் வரவே மாட்டேன்’னு அவர்ட்ட சொல்லி படுவேகமா உள்ளே நடந்து போனேன். நானோ ரொம்ப குள்ளம்! எங்காத்து வாசல் நிலைப்படியோ என்னை விட ஒசரம். அது…. அது எப்டி என் தலைல இடிச்சுதுனே புரில்லே! ‘ணங்’குனு இடிச்சுடுத்து பின்னந்தலை நல்ல அடி…. நல்லவேளை ரத்தம் வரலை. அப்டியே ஒக்காந்துட்டேன்.

சட்டுனு எம் மனசுல ஆஞ்சநேய ஸ்வாமி தோணி, ‘ஏண்டாப்பா… அவாத்து கல்யாணத்துக்கா ஒன்ன கூப்பிட வந்திருக்கான்? பிரபு ஸ்ரீராமனுடைய உற்சவத்துக்குன்னா ஒன்ன கூப்பிட வந்தான்…. வந்தவன்கிட்ட அப்படி பேசி அனுப்சுட்டயே…. இது தர்மமா’னு சொன்னாப்ல உணர்ந்தேன்… உடனே போட்டது போட்டபடியே… காரை எடுத்துண்டு ஓடி வந்துட்டேன். அதுக்கு ரமணி ஐயரைப் பொறுத்துக் கொள்ளும்படியா ரொம்பவும் நா கேட்டுக்கறேன்!’’

வியந்து நின்றேன் நான். அடுத்துப் பேசிய மகாதேவன், ‘‘நானும் ரமணி அண்ணா்ட்ட மன்னிப்புக் கேட்டாகணும். நடந்ததை சொல்லிப்டறேன். ரமணி அண்ணா எங்காத்துக்கு வரச்சே ஒடம்பு சரியில்லாத கட்டில்ல படுத்துண்ருந்தேன். ‘லட்சார்ச்சனைக்கு லட்டு புடிக்கணும்… ஜீனி விலை ஜாஸ்தியாயிடுத்து ஒத்தாசை பண்ணணும்’னார். உடனே நான் ‘என்ன விலை வித்தாலும் ஜீனி வாங்கி எனக்கு லட்டு புடிச்சுதான் ஆகணும்’னு ராமன் கேக்கறானா…. சாத்துக்குடி வாங்கிப் பண்ணுங்கோ, போதும்னு சொல்லிப்பிட்டேன். அவர் புறப்பட்டுப் போய் பதினஞ்சு நிமிஷம் ஆயிருக்கும். சித்த கண்ணு அசந்தேன்…. திடீர்னு ரெண்டு புருவத்துக்கும் நடுவிலே கூர்மையா ஏதோ வந்து குத்தித்து!

முழிச்சுண்டு பாத்தேன். தலைமாட்டுச் சுவரில் மாட்டியிருந்த காலண்டரின் தகரக் கம்பிதான் அப்படி குத்திடுத்து. காலண்டரை எடுத்துப் பார்த்தேன். கஞ்சீவி மலையைத் தூக்கிண்டு ஹனுமன் பறப்பது மாதிரி ஏ.பி.டி. போட்டிருந்த காலண்டர் அது. நல்ல வேளை…. அது கண்ணில் குத்தவில்லை. ரமணி அண்ணாவிடம் அப்படி சொன்னதுக்காக மாருதி கொடுத்த ‘பனிஷ்மென்ட்’டா உணர்ந்தேன். உடனேயே ஜீனி வாங்கி லட்டு புடிக்க ஏற்பாடு பண்ணும்படி ரமணி அண்ணாவுக்கு ரூபாயை அனுப்பிச்சுட்டுதான் தூங்கினேன்!’’ என்று கண்கலங்கக்க கூறினார். இந்த இருவரின் மன மாற்றத்துக்கான தெய்வ சம்பவங்களில் நெகிழ்ந்து இந்த அடியவன் அதிசயித்து நின்றேன்!

ரமணி அண்ணா

The post அற்புதங்கள் நிகழ்த்திய அனுமந்தராயன் appeared first on Dinakaran.

Read Entire Article