சென்னை,
ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சத்திற்கான வங்கி வரைவோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.10.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களுக்கு தினசரி பூசைகள் நடத்திட வழங்கப்பட்ட வைப்பு நிதி ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டு, 12,959 திருக்கோவில்களுக்கு ஒரு தவணையில் ரூ.130 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் 4,041 நிதி வசதியற்ற திருக்கோவில்கள் ஒருகால பூசைத் திட்டத்தில் இணைக்கப்பட்டு, தற்போது 17,000 திருக்கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்காக அரசு நிதி ரூ.210.41 கோடி வழங்கப்பட்டுள்ளதோடு, அத்திருக்கோவில்களின் மின் கட்டணத்திற்காக ரூ.6 கோடியில் மைய நிதி ஏற்படுத்தப்பட்டு மின் கட்டணம் துறையின் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களின் அர்ச்சகர்களுக்கு முதன் முறையாக மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10,000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஒருகால பூசைத் திட்ட திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்காக பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித் தொகையினை 500 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை முதல்-அமைச்சர் இன்று வழங்கினார்.
கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 24.11.2023 அன்று 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் ரா.சுகுமார், சி.ஹரிப்ரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.