
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். அதை வைத்தே அரையிறுதியில் எந்தெந்த அணிகள் தங்களுக்குல் மோத உள்ளன என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து முதலிடம் பிடித்தால் குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் எதிர்கொள்ளும்.
ஒருவேளை நியூசிலாந்திடம் தோல்வி கண்டு 2வது இடம் பிடித்தால் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா தங்களது அரையிறுதியில் எதிர்கொள்ளும். இந்நிலையில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவே இந்திய அணி விரும்பும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, அந்த 2 அணிகளுமே நல்ல அணிகள். இந்தியா தாங்கள் எளிதாக வீழ்த்தக்கூடிய அணி என எந்த எதிரணிகளையும் நினைக்க மாட்டார்கள். ஏனெனில், நாக் அவுட் சுற்றில் வாழ்வா? சாவா? என்ற சூழ்நிலையே இருக்கும். எனவே, இந்தியா எந்த அணியையும் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை விரும்பலாம்.
ஏனெனில் சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவை அவர்கள் எதிர்கொண்டார்கள். தென் ஆப்பிரிக்காவை 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா எதிர்கொண்டது. மேலும், ஆஸ்திரேலியா முதன்மை பவுலர்கள் இல்லாமல் விளையாடுகிறது. குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. அதனால் அவர்களை அரையிறுதியில் எதிர்கொள்ள இந்தியா விரும்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.