அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது; 9 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு

3 weeks ago 4


சென்னை: தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9ம் தேதி துவங்கி டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் நேற்று அரையாண்டு விடுமுறை நீடிக்கப்படுவதாக தவறான தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என்றும், இன்று திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டது.

மேலும் ‘பெஞ்சல்’ புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது; 9 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article