அரைக்கீரை : முழு லாபம்!

2 hours ago 3

ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உணவு அவசியம். நல்ல உணவு என்றால் என்ன? இன்று பலர் கூகுளில் தேடுகிறார்கள். ஆனால் விசயம் அறிந்தவர்கள் கீரையைச் சாப்பாட்டில் சேருங்கள். அது நீங்கள் நல்ல, சிறந்த ஆரோக்கியமான உணவு உண்பதை உறுதி செய்யும் என்பார்கள். உணவு நிபுணர்கள், மருத்துவர்கள் என எல்லோரும் கீரையைத்தான் பரிந்துரைப்பார்கள். இத்தகைய கீரைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சந்திரபுரம் ஆ.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற விவசாயியைச் சந்தித்தோம்.“ நான் கடந்த 15 வருடங்களாக கீரை சாகுபடி செய்து வருகிறேன். கீரைகளில் பல வகைகள் இருப்பது நமக்குத் தெரியும். மக்கள் அதிகம் விரும்புவது சிறுகீரை, முளை கீரை, அரைக்கீரை போன்றவற்றைத்தான். இதில் நான் தற்போது அரைக்கீரையைப் பயிரிட்டு இருக்கிறேன். இந்தக் கீரை தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்தது. தண்டுக்கீரை போலவே குத்துச் செடியாகப் படர்ந்து வளரும். இதை அறுத்து விட்டால் மறுபடியும் துளிர்த்து வளரும். இதனால் இந்தக் கீரையை அறுப்புக்கீரை என்றும் சொல்வோம்’’ அரைக்கீரையைப் பற்றி சில தகவல்களை அடுக்கிய சங்கரிடம், இந்தக் கீரை சாகுபடி விபரங்கள் குறித்து கேட்டோம்.

“ அரைக்கீரையை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தபோதும் சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப்பட்டங்கள் இதற்கு உகந்ததாக இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க ஒரு கிலோ வரை விதை தேவைப்படும். நிலத்தை நன்றாக ஏர் ஓட்டி, ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் போட்டு பாத்தி அமைப்போம். அதன்பிறகு கீரை விதைகளோடு மணலைக் கலந்து பாத்திகளில் தூவுவோம். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர்ப்பாய்ச்சுவது அவசியம். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுப்போம். பின்பு நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு உரங்களாக ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடுவோம். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10-15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பின்பு தேவைப்படும் நேரத்தில் களைகளை அகற்றுவோம். கீரையில் பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிப்போம்.

இதுபோன்ற எளிமையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவரும்போது கீரைகள் நன்றாக தளதளவென்று வளர்ந்திருக்கும். விதைத்ததில் இருந்து 1 மாதத்தில் அறுவடை செய்யத் தொடங்கலாம். அரைக்கீரை பொதுவாக 30 செ.மீட்டர் உயரம் வரை வளரும். இதனை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்வோம். 15 நாளுக்கு ஒருமுறை என தொடர்ச்சியாக அறுவடை செய்வோம். ஒரு அறுவடையில் சராசரியாக 2 ஆயிரம் கட்டு கீரை மகசூலாக கிடைக்கும். ஒரு கட்டு ரூ.1 என தொடங்கி 5, 6 ரூபாய் விலை போகும். நான் நம்மூரில் விற்பனை செய்தால் மிகக் குறைந்த விலைதான் கிடைக்கும். இதனால் நான் அறுவடை செய்த கீரைக்கட்டுகளை பெங்களூருக்கு மினிலாரி மூலம் ஏற்றிச் சென்று விற்பனை செய்வேன். அங்கு கமிஷன் அடிப்படையில் மொத்த வியாபாரிகள் விற்பனை செய்து கொடுப்பார்கள். ஒரு கிலோவுக்கு சராசரியாக ரூ.4 என விலை கிடைக்கும். இதன்மூலம் ஒரு அறுவடையில் ரூ.8 ஆயிரம் வருமானம் கிடைக்கும். 15 நாளுக்கு பராமரிப்பு, வண்டி செலவு என ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். அதுபோக ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும். சில சமயங்களில் கூடுதலாகவும் விலை கிடைக்கும். சில சமயங்களில் மிகக்குறைந்த விலையும் கிடைக்கும். மழைக்காலங்களில் கீரைகள் நனைந்து சேதமாகி விடும். அந்த சமயத்தில் நம்மிடம் கீரைகள் இருந்தால் நல்ல விலை கிடைக்கும். அதன்மூலம் அபரிமிதமான லாபமும் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சங்கர் – 96773 37533

The post அரைக்கீரை : முழு லாபம்! appeared first on Dinakaran.

Read Entire Article