அருமையான மணம் கொடுக்கும் அரோமா மெழுகுவர்த்திகள்!

2 months ago 8

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வேளைகளில் இந்த அரோமா மெழுகுவர்த்திகளை அழகிய டப்பாக்கள், பாட்டில்கள், கப்களில் விற்பனை செய்வது பெருகி வருகிறது. அன்பளிப்பாகவும் இந்த மெழுகுவர்த்திகள் அதிகம் கொடுக்கப்படுகின்றன. மேலும் இது மழைக்காலம் சாதாரண மெழுகு வர்த்திகள் அதிக பட்சம் ஒரு மணிநேரம் எரியும். ஆனால் இந்த அரோமா மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிந்தால் கூட 4 மணி நேரம் துவங்கி 16 மணி நேரங்கள் வரையிலும் கூட எரியும் திறன் கொண்டவை. இதில் நல்ல நறுமணமும், இயற்கையான மூலிகைகளில் பயன்களும் சேர்ந்து இந்த மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. சரி எங்கே பார்த்தாலும் மின்னும் இந்த அரோமா மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தும் போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்.

1. முதலில் உங்கள் வீடுகளுக்கு என்ன வாசனை தேவை என யோசிக்காமல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எந்த நறுமணம் பிடிக்கும், என யோசித்து மெழுகு வர்த்திகள் வாங்குவது நல்லது.
2. பொதுவாகவே வெண்ணிலா நறுமணம் ஒருவித பேக்கரி வாசனை கொடுக்கும் என்பதாலேயே முதல் முறை தேர்வின் போது இந்த வெண்ணிலா வாசனைக் கொண்ட மெழுகுவர்த்திகளை தேர்வு செய்துகொள்வதுபாதுகாப்பானது.
3. அரோமா மெழுகுவர்த்திகளை நன்றாக முகர்ந்துப் பார்த்து ஆழமாக சுவாசித்து அந்த நறுமணம் உங்களுக்கு என்ன விதமான உணர்வை உண்டாக்குகிறது, இடையூறாக ஏதேனும் இருக்கிறதா எனத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வது நல்லது.
4. வீட்டில் யாருக்கேனும் தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பின் முடிந்தவரை இயற்கையான அரோமா மெழுகுவர்த்திகளை தேர்வு செய்வது நல்லது. இல்லையேல் அரோமா மெழுகுவர்த்திகளிலேயே சைனஸ் பிரச்னைகளுக்கான மருத்துவ வகைகளும் வருகின்றன. அவற்றை தேர்வு செய்யலாம்.
5. குளிர்காலத்தில் வெண்ணிலா, கோகோ, சாக்லேட் நறுமணங்களும், கோடைகாலத்தில் பழங்கள், மூலிகைகள், சாதாரண காலநிலை நேரங்களில் பூக்களின் வாசனைகள் எனத் தேர்வு செய்யலாம். வீட்டிலேயே சுலபமாக செய்ய சில அரோமா மெழுகுவர்த்திகள்.

தேவையானவை

மெழுகுக்கு:
சாதாரண பெரிய மெழுகுவர்த்திகள் : 2
பீவேக்ஸ் (மூலிகை அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்): சிறிதளவு
சோயா வேக்ஸ்(கிராஃப்ட் மூலப் பொருட்கள் கிடைக்கும் கடைகளில் வாங்கலாம்) -: 100கிராம்
எலுமிச்சை: 2
ஆரஞ்சு: 2
சில்வர் ஸ்பூன் : ஒன்று
மெழுகை உருக்க தேவையானபாத்திரம்
மெழுகு திரி: தேவைக்கேற்ப

செய்முறை:

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுபழம் இரண்டையும் ஸ்பூன் உதவியுடன் உள்ளிருக்கும் பழத்தை மேலிருக்கும் தோல் சேதாரம் ஆகாதபடி அப்படியே எடுத்துவிடவும். இப்போது தோல் மட்டும் சிறிய கப் வடிவத்தில் கிடைக்கும். அதனுள் திரியை சிறிய அளவில் வெட்டி செங்குத்தாக நிறுத்தவும். பவுலில் சிறிதளவு மெழுகை எடுத்து உருக்கி பழத்தோலுக்குள் ஊற்றவும். கலர்ஃபுல்லான , ஆரஞ்சு, எலுமிச்சை வாசனை இணைந்து மெழுகுடன் சேர்ந்து வீட்டை நிறைக்கும். இதே பாணியில் கப்கள், கண்ணாடி பாட்டில்களில் கூட அரோமா மெழுகு வர்த்திகள் செய்யலாம். மெழுகு உருக்கும் போது அதனுடன் இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றைப் பொடியாக சேர்த்து காய்ச்சி கப்களில் ஊற்றலாம். வெண்ணிலா எசென்ஸ், பாடி ஸ்பிரே, பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ், நாம் பயன்படுத்தும் பெர்ஃபியூம்கள், டால்கம் பவுடர், சோப்புகள் கூட இணைத்து வீட்டிலேயே நறுமணமான மெழுகுவர்த்திகள் உருவாக்கலாம். இலவங்கப் பட்டை நறுமணம் வீட்டின் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். வேம்பு, துளசி போன்றவை கொசுக்கள் அண்டாமல் பாதுகாக்கும்.
– ஷாலினி நியூட்டன்

The post அருமையான மணம் கொடுக்கும் அரோமா மெழுகுவர்த்திகள்! appeared first on Dinakaran.

Read Entire Article