அருப்புக்கோட்டை, ஜன. 5: அருப்புக்கோட்டையில் நிழற்குடை வசதி இல்லாத பஸ் நிறுத்தங்களால் பொதுமக்கள் வெயில்- மழை காலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே முக்கிய பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி, ரெட்டியபட்டி, பரளச்சி, பந்தல்குடி புதூர், விளாத்திக்குளம் போன்ற பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாடார் சிவன் கோயில், மெயின் பஜார், பழைய தனலட்சுமி ஹோட்டல் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன.
தற்போது மரக்கடை பஸ் நிறுத்தத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் நிழற்குடை வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் நாடார் சிவன் கோயில் பகுதி, தங்கமயில், பாம்பே மெடிக்கல், பழைய தனலட்சுமி ஹோட்டல் ஆகிய பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி இல்லை.இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழை- வெயில் காலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் அருகில் உள்ள கடைகளின் தாழ்வாரங்களில் ஒதுங்கி இருந்து பஸ் வரும் போது ஏறி செல்கின்றனர். எனவே முக்கிய வழித்தடத்திலுள்ள இந்த பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அருப்புக்கோட்டையில் நிழற்குடை வசதி இல்லாத பஸ் நிறுத்தங்கள் வெயில்- மழையில் சிரமப்படும் மக்கள் appeared first on Dinakaran.