அரியானாவின் 'பத்தாண்டுகால வலிக்கு' காங்கிரஸ் முடிவுகட்டும் - ராகுல் காந்தி

3 months ago 28

சண்டிகர்,

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தற்போது மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் தனது விரிவான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், விவசாயிகளின் நலனுக்கு ஆணையம் அமைப்பது, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அரியானாவின் 'பத்தாண்டுகால வலிக்கு' காங்கிரஸ் முடிவுகட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பத்தாண்டுக் கால ஆட்சியில் அரியானாவின் செழிப்பு, கனவுகள் மற்றும் அதிகாரத்தை பா.ஜ.க. பறித்துவிட்டது. அக்னிவீர் திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அனைத்து குடும்பங்களின் மகிழ்ச்சியும் பறிபோனது. பணவீக்கம் பெண்களின் தன்னம்பிக்கையைப் பறித்தது. கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்க முயன்றார்கள்,

பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜி.எஸ்..டி மூலம் லட்சக்கணக்கான சிறு வணிகர்களின் லாபத்தைப் பறித்தனர். மாநிலத்தின் சுயமரியாதையையும் பா.ஜ.க. பறித்துள்ளது. வரவிருக்கும் காங்கிரஸ் அரசு பத்தாண்டுகால வலிக்கு முடிவுகட்டும். ஒவ்வொரு அரியானா மக்களின் நம்பிக்கை, ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்றுவது உறுதி. சேமிப்பிலிருந்து ஆரோக்கியம் வரை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமைகளைப் பாதுகாத்தல், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது" என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

Read Entire Article