அரியானா முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி: பிரதமர் மோடி விமர்சனம்

1 month ago 13

ஹிசார்: காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் அரியானா மாநிலத்தில் முதல்வராக தீவிரம் காட்டி வருகிறார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அரியானா மாநிலத்தின் ஹிசாரில் நடந்த பாஜவின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘அரியானாவின் வளர்ச்சி இடைவிடாது தொடர வேண்டும். அதனால் மக்கள் பாஜவுக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இமாச்சலில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பாருங்கள். தேர்தலின்போது அவர்கள் பேசிய பொய்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார்கள். காங்கிரஸ் இருக்கும் இடத்தில் ஸ்திர தன்மை வராது. அரியானா மாநில காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை. காங்கிரசில் எப்படி முதல்வர் ஆக வேண்டும் என்று அனைவரும் மும்முரம் காட்டுகிறார்கள். பாபுவும் (புபேந்தர் ஹூடா) பேட்டாவும்(திபேந்தர் ) ஒரு போட்டியாளர். இருவரும் சேர்ந்து மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களை சரிகட்டுகிறார்கள். இவை அனைத்தையும் அரியானா வாக்காளர்கள் பார்த்து காங்கிரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து
ஜம்முவில் நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு தற்காலிகமானது தான். பாஜ மட்டுமே மீண்டும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும். ஜம்மு -காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிடிபி கட்சிகள் எரிச்சலடைகின்றன. ஏனென்றால் உங்கள் வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை. மக்களின் உரிமைகளை பறிப்பதன் மூலமாக அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்துகிறார்கள். பாகுபாட்டை பாஜ முடிவுக்கு கொண்டு வரும்” என்றார்.

The post அரியானா முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article