அரியானா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைகிறது: இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் மும்முரம்

1 month ago 13

சண்டிகர்: அரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் பாஜ ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இருப்பினும் இந்த தேர்தல் பாஜவுக்கு சவாலானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை, பாஜ தனியாகவும், காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது.

தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜவின் முதல்வர் முகமாக, தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரசின் முதல்வர் முகமாக பூபேந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். அரியானாவை பொறுத்தவரை விவசாயிகளின் பிரச்னை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும் பஞ்சாயத்துதான். விவசாயிகளை பொறுத்தவரை, மோடி 2.O அரசின்போது கொண்டுவ ரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில், அரியானா விவசாயிகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

சமீபத்தில் கூட கங்கனா ரனாவத் வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, தங்களுக்கும், ரனாவத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜ விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல இந்த மாநிலத்தில் வேலையின்மை, தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பிரச்னை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்த பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்த வினேஷ் போகத் தற்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார். மட்டுமல்லாது, கேலோ இந்தியா விளையாட்டுகளுக்காக குஜராத்துக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, விளையாட்டு வீரர்கள் அதிகமுள்ள அரியானாவுக்கு குறைவான நிதி ஒதுக்கியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் வரும் 8ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

 

The post அரியானா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைகிறது: இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Read Entire Article