மதுரை: தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி தரக்கூடாது. மேலும் தஞ்சை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுபோல், தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியை பாதுகாக்கப்பட்ட சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (நவ.22) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் பாரதிதாசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.