புதுடெல்லி,
பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை கடந்த மாதம் 28-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி வரியையும் ரத்து செய்தது. அதேநேரம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. அதாவது டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் (சுமார் ரூ.41,200) நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை வெளியிட்ட அறிவிக்கையில், "பாசுமதி அல்லாத அரிசி (பச்சரிசி) வகைகளுக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, நெல் உள்ளிட்ட புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி வகைகளுக்கு இதுவரை 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.