புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து டெல்லியில் தேர்தல் நடத்தை விதி அமளில் உள்ளது.
இந்நிலையில், நேற்று புதுடெல்லியில் உள்ள கிழக்கு கிட்வாய் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு நாற்காலிகள் வழங்கியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் வழங்க சொன்னதாகவும் தேர்தல் ஆணையத்தில் புதுடெல்லி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா புகார் அளித்துள்ளார். இந்த புகாருடன் நாற்காலிகள் வழங்கியதற்கான வீடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.