அரவணைக்கும் அன்பு உறவுகள்!

3 months ago 23

நன்றி குங்குமம் தோழி

நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் உறவு என்று சொல்ல முடியாது. ஒன்று விட்ட உறவு முறை, இரண்டு விட்ட உறவு முறை என்று நிறைய உறவுகளால் பின்னப்பட்டதுதான் குடும்பம் எனப்படுவது. சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா போன்ற ஒரே குடும்ப உறவுகள் மிகவும் நெருக்கமாக இருந்தாலும், அவர்களின் வாரிசுகள் மூலம் உருவாகும் பந்தங்களும் அடுத்த தலைமுறையின் உதவும் பாலங்களாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தின் உடன் பிறப்புகளே தனித்தனி நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் எப்படி தங்கள் பாசத்தைக் கொட்டி வளர்வார்கள் என்றே புரிவதில்லை. நம் உறவுகளில் பலர் திருமணமாகி வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு வாரிசுகள் இருப்பதை கேள்விப்பட்டு இருந்தாலும், அவர்களுடன் பெரிய அளவில் உறவு இருக்காது. அவர்கள் தன் பெற்றோர்களை பார்க்க வரும் பொழுது, அவர்களை சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சொந்தங்கள் இங்கு இருப்பதால் அவர்களின் மகன் அல்லது மகளுக்கு இந்தியாவில் விமரிசையாக திருமணம் நடக்கும். அப்பொழுது குடும்பம் முழுவதும் ஒன்று கூடும். ஆனாலும் திருமண நேரத்தில் அவர்களிடம் தனியாக நேரம் செலவு செய்ய சந்தர்ப்பம் இருக்காது.

‘ஹலோ’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம். காலம் ஊருண்டோட அவர்களின் எண்பதாவது பிறந்த நாளுக்கு மகள் தாய்நாட்டிலுள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு, தன் பெற்றோர்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு அவர்களுக்கு அதை சர்ப்பிரைஸ் பரிசாக கொடுக்க விரும்புகிறார்கள். இதற்காக திடீரென தொடர்பு கொள்வார்கள். சிறு வயதில் தன் தாய், தந்தை எப்படி இருந்தார்கள், யார் யாருடன் பழகினார்கள், என்னவெல்லாம் விளையாடினார்கள், எங்கெங்கே சென்றார்கள் போன்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றைக் குறும்படமாக தயாரித்து தாய், தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பது இன்றைய டிரெண்டாக மாறிவருகிறது. அதற்காக ஒவ்வொரு உறவினரிடமும் செய்திகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொள்வார்கள். பிறந்த நாளன்று குறும்படம் வெளியிடப்படும் போது தான் பிள்ளைகளுக்கே உறவுகள் பற்றியும் தன் தாய், தந்தை வளர்ந்த ஊரைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. இருக்கும் இருப்பிடத்தின் சூழலுக்கேற்றவாறு அவர்கள் கல்வி, கலைகளைக் கற்றுத் தேர்ந்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள், உறவுகளோடு கூடி வாழும் கொண்டாட்டம், பொறுப்புகள் இல்லாமல் அனைத்தையும் பெரியவர்களிடம் விட்டு விட்டு, நண்பர்களுடன் ஆட்டம் போடுதல் என அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, வாழ்வில் முன்னேறி எவ்வளவுதான் சந்தோஷமாக இருந்துவிட முடியும்.

ஒவ்வொரு பண்டிகையும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றுவது மட்டுமல்ல, மனம் விட்டு உறவுகளோடு அன்பைப் பரிமாறிக் கொள்வதும். அதனால் மனம் லேசாவதும் இன்பம்தானே!குழந்தைகள் தன் பெற்றோரைப் பற்றி மற்ற உறவினர்கள் சொல்லி தெரிந்து கொள்ளும் விதத்தில், கால மாற்றங்கள் மனிதர்கள் மனதையும் மாற்றி விடுகிறது. நம் தாய், தந்தை சொல்லிக் கொடுத்த விஷயங்களைதான் நாம் நம் பிள்ளைகளுக்கு போதிக்கிறோம். பள்ளி விடுமுறை காலங்களில் அப்பொழுதெல்லாம் சிறப்பு வகுப்புகளோ, வேறு பயிற்சி வகுப்புகளோ கிடையாது. முழுக்க முழுக்க விடுமுறையை ஆசை தீர உறவுகளுடன் செலவிடவும், பார்க்காத இடங்களை பார்வையிடவும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து விடுவர். இதற்காக முன்கூட்டியே எங்கு செல்லலாம் என்று குடும்பமாக திட்டமிட்டுவிடுவார்கள். செல்லும் இடம் குறித்து பெற்றோர்கள் கதை வடிவத்தில் குழந்தைகளுக்கு விவரிப்பார்கள். வீட்டில் தாத்தா-பாட்டி சொல்லும் கதைகள் வேறு. பல நாட்கள் புத்தகங்கள் மூலம் படித்துப் பெறும் அறிவை, சில மணி நேரங்களில் அவர்கள் விளக்கி விடுவார்கள். சமூக ஊடகங்களும் மிகுதியாக இல்லாத கால கட்டங்களில் நம் ெபரியோர்களே நடமாடும் புத்தகங்களாக இருந்திருக்கிறார்கள். இன்று, இந்த மாதிரி விஷயங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. உறவுகளுடன் பிள்ளைகள் பேசுகிறார்களோ இல்லையோ கைப்பேசியுடனும், மடிக்கணினியுடனும் நேரம் செலவிடுகிறார்கள். காலத்தின் கட்டாயமும் அப்படி. எந்தவீட்டிலும் பெரியவர்கள் கிடையாது. பிள்ளைகளை சமயத்தில் திட்டி விட்டால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் பெற்றவளை திட்டுவார்கள். ‘நல்லா வேணும்’ என்று பிள்ளைகள் தன் அம்மாவிடம் ஜாடைகாட்டி விட்டு, பாட்டியின் புடவை தலைப்புக்குள் முகத்தை மறைத்துக் கொள்வார்கள்.

தாத்தா பாட்டி செல்லம் கொடுத்தால், பிள்ளைகள் தப்பு செய்தார்கள் என்கிற கருத்தே கிடையாது. பொறுமையுடன் கேட்டு சாந்தமாகப் பேசி தவற்றைத் திருத்தினார்கள். இன்று அவர்கள் பெரும்பாலான வீடுகளில் சேர்ந்து இருப்பதில்லை. பிள்ளைகள் சொந்த அப்பா, அம்மாவுடன் பேசி, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்களும் நேரத்தை செலவிட முடியவில்லை. உறவுகள் நிறைய இருந்த பொழுது, குடும்ப பாரத்தை பெரியவர்கள் சுமந்தார்கள். கலந்து ஆலோசித்து பெரிய பெரிய பிரச்னைகளைக் கூட எளிதாக சமாளித்தார்கள். சிறியவர்கள் வரை எந்த பிரச்னையும் வந்ததே கிடையாது. ஒரு கஷ்டம் வந்தால் போதும், பெரியவர்கள் காதில் போட்டு விட்டாலே போதும். அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள். இன்று எவ்வளவோ வசதிகள் வந்து விட்ட பின்னும், ஒவ்வொரு வீடுகளிலும் மன அழுத்தம் என்பது அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. இரண்டு-மூன்று பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், காலையில் பார்த்தால் பரபரப்பாகவே காணப்படுகிறது. ஆளுக்கு ஒரு பக்கம் ‘யூனிபார்ம்’ இஸ்திரி செய்வதும், புத்தகங்களை அட்டவணைப்படி அடுக்குவதும், அம்மா காலை உணவுக்காக ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கூப்பிடுவதும், பின் ஆட்டோவுக்கோ, ஸ்கூல் பஸ்ஸூக்கோ லேட் ஆனால் கோபப்படுவதும், பின் அவசரம் அவசரமாக தானே அவர்களை கொண்டு விட்டு வருவதும் தினந்தோறும் நாம் கேள்விப்படும் காட்சிகள். ஆனால், ஏழு, எட்டு பிள்ளைகள் இருந்த காலம், அனைவரும் அரசுப் பள்ளிக்குத்தான் போனார்கள்.

காலார, ஒய்யாரமாக ஒரு பையை மாட்டிக் கொண்டு நடந்தே சென்றார்கள். அனைவருக்கும் தூக்கு நிறைய சாப்பாடு கட்டித் தந்தார்கள். சில சமயம் அடுக்கு டப்பாக்களில் விதவிதமான உணவுப் பண்டங்களை ஒன்றோடொன்று கலக்காதவாறு வாழையிலை நடுநடுவே வைத்து அனுப்பினார்கள். பிள்ளைகள் நண்பர்களுடன் மரத்தடியில் அமர்ந்து, டப்பாவைத் திறந்தால், பெரியவர்கள் கைமணம் கட்டடம் முழுவதும் வீசும். ஒரு மணி நேர சாப்பாட்டு நேரத்தில், ஒருவருக்கொருவர் பங்கிட்டு சாப்பிடும் பொழுது, பிறருக்குக் கொடுக்கும் குணம் தானே வந்து சேரும். பின் கூடி விளையாடும் பொழுது விட்டுக் கொடுக்கும் தன்மை வந்தது. மீண்டும் தெம்புடன் மதிய வகுப்பை முடித்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் பொழுதும் போன உற்சாகத்திலேயே வீடு வந்து சேர்ந்தார்கள். பிள்ளைகள் வீட்டுக்கு திரும்பும் நேரம் யாராவது வீட்டில் இருந்து, அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து, உடற்பயிற்சி கிடைக்கும் அளவுக்கு விளையாட உற்சாகப்படுத்தியும், அன்றைய நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடியும் ஊக்குவித்து அரவணைத்து வந்தார்கள். அவர்களெல்லாம் இன்றைய காலகட்டத்தில் எங்கே போனார்கள். சில குடும்பங்களில், பிள்ளைகள் வரும் பொழுது அம்மா வீட்டில் இருப்பதில்லை. வேலைக்குச் செல்கிறார்கள். அவரவர் வேலை பளுவே அவர்களை களைப்பில் ஆழ்த்தி விடுகிறது. அவர்களை அணைக்கவே ஆளில்லாத நிலையில், அவர்களால் பிள்ளைகளிடம் பரிவு காட்ட இயலாத நிலைகூட ஏற்படலாம். வசதிகளும், பொருட்களும் கிடைத்தாலும், நம்மை ஆதரிக்கவும், நம்மிடம் பரிவு காட்டவும் ஆளில்லை என்றால் என்னதான் பயன்? விலை உயர்ந்த பொருட்களையோ, ஆடம்பரமான பொருட்களையோ நாம் நாடுவதை விட, நம் மனம் யாராவது நம்மை அரவணைக்க மாட்டார்களா என்றுதான் இன்று ஏங்குகிறது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

 

The post அரவணைக்கும் அன்பு உறவுகள்! appeared first on Dinakaran.

Read Entire Article