அரண்வாயல்குப்பம் ஊராட்சியில் சுடுகாடு கோரி மூதாட்டி உடலுடன் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்

3 hours ago 1


திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் அரண்வாயல்குப்பம் ஊராட்சியில் இறந்தவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை பயன்படுத்தி வந்தனர். மேலும், கூவம் ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ தகனம் மற்றும் அடக்கம் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி அன்னம்மாள் (80) என்ற மூதாட்டி நேற்று மரணமடைந்தார். அவரை அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்தபோது கூவம் ஆற்றில் தண்ணீர் இருந்ததால் கரையோரத்தில் புதைக்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடு பகுதிக்கு வந்தனர். ஆனால் அந்த சமூகத்தினர், இதையே வழக்கமாக கொண்டால் எங்களுக்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இறந்த மூதாட்டியின் உறவினர்கள் நேற்று மாலை 6 மணியளவில் திருவள்ளூர் – பூந்தமல்லி சாலையில் சுடுகாடு கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்து திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த், பூந்தமல்லி துணை ஆணையர் ரவிக்குமார், வெள்ளவேடு மற்றும் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், ஜெயகிருஷ்ணன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சுவாரத்தை நடத்தினர். இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு மாற்று இடம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அரண்வாயல்குப்பம் ஊராட்சியில் சுடுகாடு கோரி மூதாட்டி உடலுடன் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Read Entire Article