அரசை குறை சொல்ல கோடிகளை கொட்டி யுடியூப் சேனல்களை திறக்கும் தாமரை பார்ட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 hours ago 2

‘‘அரசை குறை கூறுவதற்கென்றே கோடிகளை கொட்டி புது திட்டம் தீட்டிட்டு இருக்காமே தாமரை பார்ட்டி..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘உண்மை தான். தமிழகம் முழுவதும் 100 யுடியூப் சேனல்களை திறக்க, தாமரை கட்சியின் தமிழக தலைமை திட்டம் போட்டிருக்காம். அரசை தினமும் குறைகூறி ஏதாவது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனையாம். கற்பனையா எது வேணாலும் அடிச்சுவிட்டுக்கோ…ஆனா குறை சொல்றதுல ஒரு குறை இருக்கக்ககூடாது என்பது கட்டளையாம்.

அமைச்சர் ஸ்லோவா நடக்கிறார், வேகமா நடக்கிறார், அது சரியில்ல.. இது சரியில்லனு எதையாவது போட்டு நிரப்பிக்கிட்டே இருக்கணும்.. என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்களாம். இதற்காக ஒரு யுடியூப் சேனலுக்கு மாசம் மூன்றரை லட்சம் ரூபா குடுக்கிறாங்களாம். நூறு சேனலுக்கு இப்பிடி மூன்றரை கோடி ரூபாய அள்ளி வீசி தமிழக அரசுக்கு எதிரா விமர்சிக்க படாதபாடுபடுறாங்களாம்.. ஆனா தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகாது என்பது வேறு விஷயம்..’’ என கூறி சிரித்தார் விக்கியானந்தா.

‘‘கவுன்சிலரை காக்க வச்ச அதிகாரி பத்தி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல சாலை, பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருது. சாலைப்பணியில் தரமான தார் கலவையை கலக்கி போடறது இல்லையாம். இந்த கலவையை ஆய்வு செய்யணும்னு கவுன்சிலர்கள் சிலரின் கோரிக்கையா இருக்குதாம். இதை கவனிக்க வேண்டிய உயர் அதிகாரி, எதையும் கண்டுக்கிறதே இல்லையாம். கவுன்சிலர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க உயர் அதிகாரி அலுவலகத்திற்கு போனாலும், பார்க்கவே முடியலையாம்.

அப்படியே காத்திருந்து கவுன்சிலர்கள் உயர் அதிகாரியை பார்த்து குறையை சொன்னாலும், காது கொடுத்து கேட்கிறதும் இல்லையாம்.  அம்மாபேட்டை மண்டலத்தை சேர்ந்த ஒரு கவுன்சிலர், உயர் அதிகாரியை அலுவலகத்திற்கு பார்க்க போயிருக்கிறாரு. அப்போ கவுன்சிலரை ரெண்டு மணி நேரம் காத்திருக்க வைச்சிட்டாராம். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த கவுன்சிலர், உயர் அதிகாரியை பார்க்க அவரது அறைக்குள்ளே போயிட்டாராம். உள்ளே போய் கவுன்சிலர் குறையை சொல்லியிருக்காரு.

ஆனா உயர் அதிகாரி, உங்க கவுன்சிலர் வேலையை மட்டும் போய் பாருங்க. என்கிட்ட எதுவும் பலிக்காது என ஆவேசமா தெரிவிச்சாராம். நொந்துபோன கவுன்சிலர் அப்புறமா மாநகர தந்தையை பார்த்து தான் நினைச்சத சாதிச்சிட்டாராம். இதுதான் இப்போ கார்ப்பரேஷன் பணியாளர்கள் மத்தியில் பேச்சா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி மந்திரியின் செயலால், நிர்வாகி கடுங்கோபத்தில் இருப்பதாக சொல்றாங்களே.. என்னா மேட்டர்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகரத்தின் இலைக்கட்சி செயலாளர்களில் இரு மாஜிக்கள் உள்ளிட்ட மூவருமே எதிரெதிர் திசைகளிலேயே பயணிப்பதும், இவர்களுக்கு கீழே பலதரப்பட்ட அணிகளாக உடைந்து கிடப்பதும் ஊரறிந்த விஷயம். கட்சியின் இணையப் பிரிவின் மாநிலத்தலைமைப் பொறுப்பில், மூவரில் ஒருவரான செல்லமானவரின் வாரிசு இருக்கிறார். கட்சியில் அதிகாரம் மிக்க முக்கிய இடத்தில் இருப்பதாக தன்னை காட்டிக் கொள்ளும் உதயத்துக்கு, இந்த விஷயம் நீண்ட காலமாக உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

நேரடியாக களத்தில் இறங்கினால் சிக்கலாகி விடும் என்று யோசித்த உதயமானவர், கொங்கு மண்டலத்து மணிகள் மூலமாக அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, செல்லமானவரின் வாரிசை கழற்றிவிட்டு, தாமரைக் கட்சியிலிருந்து இலைக்கட்சிக்குள் நுழைந்த, நிர்மலமானவரை மாநில தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தப் போகிறார்களாம். நிர்மலமானவரும் தூங்கா நகர் மாவட்டத்துக்காரர்தானாம். தகவலறிந்ததும், செல்லமானவர் செம டென்ஷனாம்.

மதுரையில் ஆட்கள் போடுவதில் கொங்கு மண்டலத்தார் எப்படி ஆதிக்கம் செலுத்தலாம் என கொதித்து எழுந்திருக்கிறார். ஆனால், பின்னால் இருந்து இயக்கியவர் உதயமானவர் என்று தெரிந்ததும், அவர் மீது பன்மடங்கிற்கு ஆத்திரம் அதிகரித்திருக்கிறதாம். கூடவே இருந்து கொண்டு குழிபறிப்பதாக செல்லமானவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் உதயமானவரை குறை கூறிப் புலம்பித் தவித்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சபையின் நாயகரை ஏன் அழைத்து பேசினார்களாம்..’’ என சந்தேகத்தை கிளப்பினார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி தாமரை கட்சி எம்எல்ஏக்கள் லாட்டரி அதிபருடன் சேர்ந்து கொண்டு ஆடும் ஆட்டத்தால், தாமரை கட்சி கலகலத்து போய் உள்ளது. அதே நேரத்தில் சபையின் நாயகர், பாஜவின் உறுப்பினரே அல்லாதவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதா என ஆதங்கப்பட்டுள்ளார். இதனால் ஆளுக்கொரு கத்தியை தூக்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டப்படாத ஆட்களை நேரம் பார்த்து போட்டுத்தள்ள லாட்டரி அணி எம்எல்ஏக்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

விநாயகர் பெயரை கொண்ட தலைவருக்கு, கட்சியை சிறப்பாக வழிநடத்த தெரியவில்லை, என பாஜ மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது. உடனே மாநில தலைவர் பதவியை கைப்பற்ற, இதுதான் சரியான நேரம் என எல்லோரும் முயற்சித்து வருகிறார்களாம். சபையின் நாயகர், எனக்கு தலைவர் பதவி கொடுங்கள், நாயகர் பதவியை துறந்துவிட்டு வருகிறேன் என கூறியிருக்கிறார். இந்த தகவலால் நாயகருக்கு எதிராக அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் கம்பு சுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

இதில் ஒரு பகுதிதான் சுயேட்சை எம்எல்ஏவை தூண்டிவிட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்க வைத்தார்களாம். தொடர்ந்து துணைநிலை ஆளுநரை சந்தித்து அமைச்சர், 4 எம்எல்ஏக்கள் சபையின் நாயகர்தான் அரசியல் குழப்பத்துக்கு காரணம் என புகார்கள் கொடுத்தார்களாம். ராஜ்நிவாசுக்கு சபையின் நாயகரை மிஸ்டர் கேகே அழைத்து, தேஜ கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்ய தாங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.

தங்களுக்கு அமைச்சர் அல்லது வாரிய தலைவர் பதவி கிடைக்காமல் போனதற்கு புல்லட்சாமி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சபையின் நாயகர்தான் என்ற கடுப்பில்தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் இதேபோன்று அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post அரசை குறை சொல்ல கோடிகளை கொட்டி யுடியூப் சேனல்களை திறக்கும் தாமரை பார்ட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article