அரசுடன் கைகோர்ப்போம்

1 month ago 6

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை ெதாடர்ந்து, சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டுகிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளும் களப்பணியில் படுதீவிரமாக இறங்கியுள்ளது. மீட்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை தீவிரமாக பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தொடர்ந்து நேற்று மதுரை உள்பட தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் பரவலாகவும் மழை பெய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நிவாரண முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முகாமில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் வரை தங்கலாம். இங்கு அனைவருக்கும் உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில், தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ள நிலையில், தேவைப்பட்டால் தமிழகம் முழுவதுமிருந்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அழைக்கப்படுவார்களென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை பாதிப்பு ஆய்வின்போது தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு பால் உள்ளிட்ட உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னதாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாகவே களமிறங்கி, வடசென்னை பகுதியில் மழை பாதிப்புகளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வு செய்தார். அப்போது களப்பணியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்களுடன் தேநீர் அருந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்மழையால் தமிழகத்தின் பெரும்பாலான அணைகள், ஆறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே, கரையோர மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் தீவிர பாதுகாப்பில் உள்ளனர். மழை பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்த சூழலில், பொதுமக்களும் தங்களையே ஒரு தன்னார்வலராக எண்ணிக் கொண்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகளோடு நாமும் கை கோர்ப்போம். மழை பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம்.

The post அரசுடன் கைகோர்ப்போம் appeared first on Dinakaran.

Read Entire Article