சென்னை: கொரட்டூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (55) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக என்னை போல் 13 பேரிடம் மயிலாப்பூரை சேர்ந்த டில்லிகுமார் மற்றும் அவரது நண்பர் மகேஷ் ஆகியோர் ரூ.62.8 லட்சம் பெற்றனர். ஆனால் சொன்னபடி அரசு துறைகளில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் சையது உசேன் தெருவை சேர்ந்த டில்லிகுமார் (60) மற்றும் கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த மகேஷ் (34) ஆகியோர் தங்களுக்கு அமைச்சர்கள் தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 13 பேரிடம் மொத்தம் ரூ.62.8 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது. அதைதொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட டில்லிகுமார் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62.8 லட்சம் மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.