சேலம்: அதிமுக ஆட்சியின் போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, வாலிபர்களிடம் ரூ.34 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி மீது, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் 4வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அரியானூர் பழனிசாமியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காஜாமொய்தீன், நாவரசன் ஆகியோரும் வந்தனர். பின்னர் அவர் அதிகாரிகளை சந்தித்து கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
கடந்த 2019ம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்காணலுக்கு அழைத்திருந்தனர். அப்போது அதிமுக நிர்வாகியாக இருந்த அரியானூரை சேர்ந்த பழனிசாமி என்பவர், என்னை அழைத்துப் பேசினார். தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கும், மிகவும் நெருக்கமானவன். கூட்டுறவுத்துறை தொடர்பான வேலைகளுக்கு தொகை வாங்குகிற பொறுப்பை இளங்கோவன் என்னிடம் ஒப்படைத்துள்ளார். இன்டர்வியூ பட்டியலை பார்த்துதான் உன்னை அழைத்தேன் என்றார். மேலும், எனக்கு அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதுடன் ரூ.20 லட்சம் கொடுத்தால் உடனே வேலை வாங்கி தருகிறேன் என்றார்.
அவ்வளவு தொகை என்னிடம் இல்லை என்றதும், முதலில் ரூ.10 லட்சம் கொடு. வேலை கிடைத்ததும் மீதமுள்ள 10 லட்சம் கொடு என்றார். இதையடுத்து, எனது தந்தையின் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கி கொடுத்தேன். மேலும் மாநகராட்சியிலும் வேலை இருக்கிறது. உனக்கு தெரிந்தவர்களுக்கு வேலை வேண்டும் என்றால் அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து எனது 3 நண்பர்களிடம் இருந்து, தலா 8 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை வாங்கி கொடுத்தேன். ஆனால், அவர் எனக்கும், எனது நண்பர்களுக்கும் வேலை வாங்கி தரவில்லை. தொடர்ந்து அவரது அலுவலகத்திற்கு சென்று வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை, ரூ.34 லட்சத்தை கொடுங்கள் என்றேன். ஆனால், பணத்தை தராமல் என்னை மிரட்டி வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அவரிடம் பணத்தை கேட்டு வருகிறேன். பணத்தை கேட்க சென்ற என்னை கடுமையாக அடித்து துரத்தினார். எனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி மீது புகார் appeared first on Dinakaran.