அரசு மருத்துவமனைக்கு புதிய டீன் நியமனம் கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு

3 months ago 20

 

மதுரை, அக். 4: மதுரை அரசு மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மக்கள் நோய் தீர்க்கும் மகத்தான பணியை மதுரை அரசு மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது. உள் மற்றும் புிறநோயாளிகள் என, நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையின் டீனாக இருந்தவர் ரத்தினவேல்.

இவரது பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. எனவே, மதுரை மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவப்பிரிவு பேராசிரியர் தர்மராஜ் பொறுப்பு டீனாக கடந்த மே மாதம் முதல் இருந்து வந்தார். இவர் ஆக.31ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மதுரை மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை பேராசிரியை ஜி.செல்வராணி பொறுப்பு டீனாக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். டீன் ரத்தினவேல் ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 5 மாதங்களாக பொறுப்பு டீன்களே பணியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு புதிய டீனாக டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ்குமாரை நியமித்து, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மதுரையில் புதிய டீனாக பொறுப்பேற்கும் இவர், மதுரை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவராக பணிபுரிகிறார். புதிய டீனாக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ்குமாரை, பொறுப்பு டீன் ஜி.செல்வராணி, மருத்துவ துறைகளின் தலைவர்கள், டாக்டர்கள், பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையின் புதிய டீன் இன்று (அக்.4) பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.

The post அரசு மருத்துவமனைக்கு புதிய டீன் நியமனம் கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article