சென்னை,
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் விக்னேஷ் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி, படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கூடுதல் ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, ரோந்து வாகனங்களை பயன்படுத்தி மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மருத்துவமனை முதல்வர்கள், பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.