அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்குவதால் அவதி

2 hours ago 1

*போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

தர்மபுரி : பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நகர மையப்பகுதியில் அரசு மருத்துவமனை, 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 500 முதல் 600 வெளிநோயாளிகளும், 90 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, சூடப்பட்டி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி, சீங்காடு, பாளையம் உள்பட சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் நகர்ப்புற மருத்துவமனைக்கு இணையாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இரு ஆண்டிற்கு முன்பு ரூ. 2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு காலை மற்றும் இரவு உணவாக நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் பால் வழங்க மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது காலை உணவாக இட்லி, சாம்பார் மற்றும் சட்னி வழங்கப்படுகிறது. மதிய உணவிற்கு சாதம், சாம்பார், காய்கறி மற்றும் கீரைகள் வழங்கப்படுகிறது. இரவு உணவிற்கு கோதுமை கிச்சடி வழங்கப்படுகிறது.

இதனால் உள்நோயாளிகள் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் மருத்துவமனை வளாகம், போதிய அளவில் சுகாதாரம் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தள்ளது. சாக்கடை கழிவுநீர் வெளியே செல்லாமல் மருத்துவமனையின் வளாகத்தில் கால்வாயில் தேங்கி நிற்கிறது.

மருத்துவ கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு, தினசரி அகற்றப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக வரும் மக்கள் தங்கியிருக்க போதிய ஓய்வு அறை இல்லை. அதுபோல் போதிய கழிப்பறை வசதியும் இல்லை. ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.

அந்த கழிப்பறையும் பராமரிப்பின்றி உள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதியும் கிடையாது. எனவே, மருத்துவமனை வளர்ச்சிக்கு தகுந்தவாறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கூடுதல் கட்டிட வசதிகள் உள்ளன. பொதுமக்கள் போடும் உணவு மற்றும் மருத்துவ கழிவுகளை சாப்பிட்டுக்காண்டு 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால், நோயாளிகள், பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி கழிவுநீர் வழிந்தோட ஏற்பாடு செய்ய வேண்டும்.

சில நேரங்களில் மருத்துவ கழிவுகள், குப்பை அகற்றப்படாமல் வளாகத்தில் தேக்கி வைக்கும் நிலை உள்ளது. இவற்றை தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண கழிப்பறை பகுதியில் புதர் மண்டி கிடக்கின்றன. வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகை என்பதால் கழிவுபொருட்கள் தேக்கம் ஏற்பட்டது.

தற்போது தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் போதுமான வசதிகள் உள்ளன. நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. தினசரி 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயனடைகின்றனர்,’ என்றனர்.

The post அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்குவதால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article