சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் தினமும் இருபதாயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பழைய பஸ்கள் நீக்கப்பட்டு, புதிய பஸ்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இவற்றுக்கு புதிய பேருந்துகள் வாங்குவதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு நிதியாண்டும் புதிய பேருந்துகள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தற்போது வரை போக்குவரத்து கழகங்களுக்கு 3,778 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 2025-2026ம் ஆண்டிற்கு 3,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும் 8,129 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழநாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களும் மொத்தம் 2,134 டீசல் பேருந்துகள் வாங்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றில் 260 தாழ்தள பேருந்துகள், 887 நகரப் பேருந்துகள், 997 புறநகர் பேருந்துகள் அடங்கும். நகர மற்றும் புறநகர் பேருந்துகளை பொறுத்தவரை தரைதளத்தில் இருந்து 1,000 முதல் 1,150 மில்லிமீட்டர் வரை உயரம் கொண்டது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 557, அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 110, விழுப்புரம் – 340, சேலம் – 145, கும்பகோணம் – 361, மதுரை – 341, திருநெல்வேலி – 129, கோவை – 151 என, புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை எடுத்துக் கொண்டால் 100 சாதரண பேருந்துகள், 10 ஏசி பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதவிர பேருந்துகளுக்கான மறு கட்டுமான தளம் தொடர்பாகவும் தனியாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் நகர மற்றும் புறநகர் பேருந்துகளின் வெளிபுறம் மறுகட்டுமானம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2,134 பேருந்துகள் வாங்க டெண்டர்: போக்குவரத்துதுறை தகவல் appeared first on Dinakaran.