சேலம், ஜூலை 11: சேலத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், இம்மாத இறுதியில் அரசுப் பொருட்காட்சி செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 22 நாட்கள் நடக்கும் ஆடிப்பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பண்டிகையையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சேலத்தில் ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படும். இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சி நடத்தும் வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திடலில், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில், அரசுத்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் சார்பில் சுமார் 200 அரங்குகளும் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருவதால், சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வமுடன் அரசுப் பொருட்காட்சிக்கு வந்து சென்றனர். தற்போதும் அதே இடத்தில் நடத்தப்படுவதால், பொருட்காட்சிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சி அரங்குக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் அரசுப் பொருட்காட்சி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post அரசு பொருட்காட்சிக்கு ஆயத்தப்பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.