புதுச்சேரி, நவ. 5: படிக்காமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த அரசு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் (49). டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவரது மகன் நரேந்திரன் (15) அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நரேந்திரன் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில் அனைத்து பாடப்பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
மேலும் தீபாவளி தொடர் விடுமுறையில், நரேந்திரன் படிக்காமல் செல்போனை பார்த்து நேரத்தை கழித்து வந்ததாக தெரிகிறது. இதனை கண்ட அவரது தந்தை சுதர்சன், காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாய், அரையாண்டு தேர்விலாவது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இதனால் செல்ேபானை வைத்து விட்டு படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் நரேந்திரன், தந்தை சொல்லைக் கேட்காமல் செல்போனை பார்த்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சுதர்சன், மகனிடமிருந்து செல்போனை பறித்து வைத்துள்ளார். இதில் மனமுடைந்த நரேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரம் இல்லாத நேரத்தில் அவரது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்து இதனை பார்த்த சுதர்சன், உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.முதலியார்பேட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post அரசு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.