சென்னை: அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் பெரம்பூரில் புதிய அஞ்சல் துறை பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களை அவர் சந்தித்து பேசியதாவது: ஜூலை 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடக்கிறது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது.
தற்போது வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆர்எப்ஐடி சிப் பொருத்தப்பட்டவை என்பதால் விமான நிலையங்களில் குடிபெயர்வு பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்கவும் போலி பாஸ்போர்ட்களை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட சிப் இல்லாத பாஸ்போர்ட்களும் பிப்ரவரி 2028 வரை செல்லுபடியாகும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு பொதுமக்கள் தாங்களாகவே அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையங்களை (சிஎஸ்சி) நாடலாம். தனியார் இணையதள மையங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பாஸ்போர்ட் சேவையில் ஏற்படும் குறைகளையும் சந்தேகங்களையும் போக்குவதற்கு பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செயல்படுவதால் இதன் மூலம் பயன்பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்
The post அரசு – தனியார் கூட்டு முயற்சியில் பெரம்பூரில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம்: சென்னை மண்டல அலுவலர் விஜயகுமார் தகவல் appeared first on Dinakaran.