சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நான் கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
கேரள அரசு வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்வதற்கு ரூ.31.24 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 2023ம் ஆண்டு அக்.4ம் தேதி தமிழ்நாடு அரசு, கேரள அரசிற்கு இத்தொகையை செலுத்தியது. தரைப்பாலம் சீரமைக்கும் பணி கடந்த பிப்.9ம் தேதி தொடங்கப்பட்டு மே 9ம் தேதி முடிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக, மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
The post அரசியல் லாபத்திற்காக வெற்று போராட்டங்களை அறிவிக்கும் அதிமுக: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் appeared first on Dinakaran.