சென்னை: “அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அரசியலாக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி அதை அவசியமாக்கியிருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்பிற்கும் மத்திய அரசின் திட்டங்கள் முழுவதுமாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய - மாநில அரசுகள் கொள்கையில் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருக்க வேண்டும். இதைப் புறக்கணிப்பது நல்லதல்ல என்பதை, பிரதமர் மோடி தனது செயலால் நிரூபித்திருக்கிறார். ‘மகாத்மா காந்தியை பிடிக்காது. அவர் இந்து மதக் கொள்கையை பின்பற்றியவர்’ என விசிக தலைவர் திருமாவளவன் தனது துவேஷத்தை மிகக் கடுமையாக கக்கியிருக்கிறார். காந்தியை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறார். சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என நான் கூறியதை, இன்னும் அதிகமாக அவர் கொச்சைப்படுத்தி மோசமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.